சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,
உள்ளாட்சித் தேர்தல் கண்டிப்பாக நடைபெறும். எப்பொழுது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றாலும் அதிமுக அதை சந்திக்க தயாராக இருக்கிறது. அதிமுகவை உடைக்க வேண்டும் என்று திமுக ஸ்டாலின் சதி செய்கிறார் என்பது தற்போது அம்பலமாகிவிட்டது.
அதுமட்டுமின்றி நான் தொலைக்காட்சி வாயிலாகவும், பத்திரிகை வாயிலாகவும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். அவர் செல்கின்ற இடத்திலெல்லாம் 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று சொல்கிறார்கள். 22 சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றி பெறுவோம் என்று சொன்னால் எதற்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறீர்கள்.
உங்களுக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தால் தானே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருகிறீர்கள். 22 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வென்றுவிட்டால் உங்களுக்கு தானாக பெரும்பான்மை கிடைத்து விடும் ஆனால் உள்ளத்திலே அவர்கள் அனைவருக்கும் பயம் வந்துவிட்டது. 22 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்ற நிலைமை வந்த காரணத்தினால் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து இருக்கின்றனர் என நான் கருதுகிறேன்.
ஆகவே அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 18 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலிலும், நடக்கப்போகின்ற 4 தொகுதி இடைத் தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்கள் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு முழுமையாக வெற்றி பெறுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் எனக்கூறினார்.