மறைந்த, தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியை கவுரவிக்கும் வகையில் புதுச்சேரி அரசு சார்பில் அவரது பெயரில் காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் ஒரு இருக்கையும் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கலைஞர் கருணாநிதிக்கு புதுச்சேரியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைப்பதற்காக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை தலைவராகவும், அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன், முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன், எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, எம்.எல்.ஏக்கள் சிவா, ஜெயமூர்த்தி, அன்பழகன், கீதா ஆனந்தன், செல்வகணபதி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி சிவக்குமார், நாஜிம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆகியோர்கள் உறுப்பினர்களாகவும், செய்தித்துறை இயக்குனர் வினய்ராஜ் உறுப்பினர் செயலர் என 21 பேர் கொண்ட சிலை அமைப்புக் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் கலைஞர் கருணாநிதி சிலை அமைப்புக் குழுவில் இருந்து விலகிக்கொள்வதாக அ.தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் முதலமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.அந்த கடிதத்தில் 'தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைப்பதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அதே நேரத்தில் கருணாநிதிக்கு முன் மரணமடைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அரசு சார்பில் சட்டசபையில் தாங்கள் அறிவித்தபடி சிலை அமைக்க குழு அமைக்காதது தங்களின் குறுகிய அரசியல் எண்ணத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. அதேபோல் புதுச்சேரியில் பிறந்து முதல்வராக மக்களுக்கு சேவை செய்த காங்கிரஸ் கட்சியை சார்ந்த எம்.ஓ.ஹெச்.பாருக், சண்முகம் போன்றவர்களுக்கு சிலை வைக்க அரசிடம் கோரிக்கை வைத்த போது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை காட்டி எம்.எல்.ஏக்களின் கோரிக்கைகளை நிராகரித்த தாங்கள் தற்போது கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்க குழு அமைத்து இருப்பது கூட்டணி கட்சியான திமுகவை திருப்திப்படுத்தும் செயலாகவே உள்ளது. அரசின் சட்ட முன்னுதாரண விதிகளை மீறி செயல்படுவது ஜனநாயகத்திற்கு எதிரான ஒன்றாகும்.
புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசு மறைந்த தலைவர்களுக்கு அரசு சார்பில் பெருமை படுத்துவதில் கூட அரசியல் காழ்ப்புணர்ச்சி கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவது அதிமுகவினர் மனதை புண்படுத்துகிறது. அதனால் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்க அமைக்கப்பட்டிருக்கும் குழுவில் என்னால் செயல்படாத நிலை உள்ளதால் நான் அந்த குழுவில் இருந்து விலகிக் கொள்கிறேன்.
தாங்கள் தவறை உணர்ந்து திருத்திக் கொள்ளும் வகையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிலையை அமைப்பதற்கான குழு அமைத்து அதில் என்று உறுப்பினராக சேர்த்துக் கொண்டால் மகிழ்ச்சி அடைவேன்' என குறிப்பிட்டுள்ளார்.