மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையரான ராஜகோபால் ஐ.ஏ.எஸ்.சுக்கு எதிராக, மற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது, தான் கேட்கும் தகவலைத் தர மறுக்கிறார்கள் என்று தகவல் அறியும் சட்டத்தின் படி, ஏதேனும் ஒரு துறையின் அதிகாரிகளைப் பற்றி, தகவல் அறியும் ஆணையத்திடம் புகார் கொடுத்தால், சம்பந்தப்பட்டவர் கேட்கும் தகவலைக் கொடுக்கும்படி அந்தத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடலாம். அல்லது சம்பந்தப்பட்ட துறையில் இருக்கும் தகவல் அலுவலரை அழைத்து விசாரிக்கலாம். இதுதான் தகவல் ஆணையத் தலைமை ஆணையருக்கு இருக்கும் அதிகாரம்.
இதைத் தாண்டி, தற்போதைய தலைமை ஆணையர் ராஜகோபால், துறையின் செயலாளர்களான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையே நேரில் வரச்சொல்லி சம்மன் அனுப்புகிறார் என்று கூறுகின்றனர். அண்மையில் இதே போல் பத்திரப் பதிவுத் துறை இயக்குநரான ஜோதி நிர்மலா ஐ.ஏ.எஸ்.சுக்கு இப்படியொரு சம்மன், ராஜகோபாலிடம் இருந்து போயிருக்கிறது. இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் எரிச்சலைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. அரசும் இதனால் ராஜகோபால் மீது கோபமடைந்திருப்பதாக கூறுகின்றனர்.