
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் ஆர்.எம். வீரப்பன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திராவிட இயக்க மூத்த தலைவரும், எம்.ஜி.ஆர். கழக கட்சியின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் தனது 98வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இந்நிலையில் இவரின் பிறந்தநாளையொட்டி சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது இல்லத்திற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையடுத்து அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோரும் ஆர்.எம். வீரப்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) தள பதிவில், “எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், கலைஞர் மீது அளவற்ற மதிப்பும், அன்பும் கொண்டவருமான அண்ணன் ஆர்.எம். வீரப்பன் அவர்களுக்கு 98 ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள். நம் பாசத்திற்குரிய ஆர்.எம்.வீ. நூறு ஆண்டுகள் கடந்தும் முழு நலத்துடன் வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.