Skip to main content

'எனக்கு நைட் 10 மணிக்கு நீ வந்து நிக்கணும்' - ஆபாச மிரட்டலால் இளம்பெண் தற்கொலை

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

nn

 

தூத்துக்குடியில் மில் ஒன்றுக்கு வேலைக்குச் சென்ற இளம்பெண் ஓட்டுநரின் ஆபாச போன் கால் மிரட்டல் காரணமாக அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி அருகே உள்ள சுனாமி காலனியைச் சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகள் தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள மதுரா கோட்ஸ் எனும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கும் அதே நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த செல்வம் என்ற நபருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணமான செல்வம் அடிக்கடி அப்பெண்ணிடம் வீடியோ காலில் பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பெண்ணை தன்னுடன் வெளியே வருமாறு அழைத்துள்ளார். ஆனால் இளம்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் செல்வம் உன்னுடன் வீடியோ கால் பேசும்போது எடுத்து வைத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி உள்ளார். கடந்த சில மாதங்களாகவே மிரட்டல் விட்டிருந்த நிலையில் தீபாவளியன்று வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தன்னுடைய மரணத்திற்கு செல்வம் தான் காரணம் என எழுதி வைத்துவிட்டு அவருடைய தொலைப்பேசி நம்பரையும் குறிப்பிட்டு வைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். தனது மகள் உயிரிழப்பில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி பெற்றோர் கதறி அழுதனர். தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் செல்போன் மற்றும் அவர் எழுதி வைத்த கடிதத்தை தாளமுத்து நகர் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். ஆனால் போலீஸார் அந்த நபரை பிடிப்பதில் அலைக்கழிப்பு செய்ததாகக் கூறப்படும் நிலையில், இறந்த இளம் பெண்ணின் சகோதரி வேலம்மாள் என்பவர் செல்போன் மூலம் செல்வத்தை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

 

அப்போது போதையில் இருந்த செல்வம், தன்னுடன் பேசுவது மில்லில் வேலை பார்த்து வந்த பெண் என நினைத்து, 'நீ கிளம்பி வர்ற... பத்து மணிக்கு வந்துரு. எதுக்கு நம்பர மாத்திக்கிட்டே இருக்க. எனக்கு நைட் 10 மணிக்கு நீ வந்து நிக்கணும்...' என பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. இந்த தற்கொலைக்கு காரணமான செல்வத்தை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து நடவடிக்கை செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என அப்பெண்ணின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்