சென்னை மாதாவரம் பால்பண்ணை பகுதிக்கு கரோனா பாதுகாப்புப் பணிக்காக வந்த எஸ்.ஐ. சதீஷ்குமாருக்கும், அதே பகுதியில் உள்ள அருள் நகர் நியாயவிலைக்கடையில் பணிபுரிந்த ரேவதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காலப்போக்கில் அது காதலாக மாறி, இருவரும் ஒருவருட காலமாக சந்தோஷமாக இருந்துவந்துள்ளனர். வழக்கம்போல மணலியின் பெரிய சேகாடு பகுதியில் அமைந்துள்ள ரேவதியின் சொந்த வீட்டில் இருவரும் தனிமையில் இருந்ததை, பள்ளிக்குச் சென்றுவந்த ரேவதியின் மகள் பார்த்து ஆத்திரத்தில் அதிர்ந்துபோய், "இதை நான் அப்பாவிடம் சொல்லாமல் விடமாட்டேன்" என்று சொல்லியுள்ளார். அதற்கு எஸ்.ஐ. சதீஷ் குமார், "இதைப் பற்றி உன் அப்பாவிடம் நீ சொன்னால், உன் அப்பாவும் உன் தம்பியும் உயிரோடு இருக்க மாட்டாங்க" என்று மிரட்டியுள்ளார்.
ரேவதியின் மகள் அந்தப் பயத்தில் எதையுமே தன் அப்பாவிடம் சொல்லாமல் மறைத்துவந்துள்ளார். இதிலிருந்து வழக்கம்போல வீட்டிற்கு வருவதும் போவதுமாய் இருந்துள்ளார் சதீஷ். அதுவரையிலும் ரேவதியின் மீது மட்டுமே இருந்து பார்வை, திடீரென ரேவதியின் மகளின் பக்கம் திசை திரும்பி, ரேவதியிடமே "உனக்கு தற்போது இருக்கும் வசதியைவிட இன்னும் உச்சத்திற்குக் கொண்டு செல்கிறேன். ஆனால் நீ எனக்கு ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும்" என்று கேட்டுவிட்டு, "உன் மகளை எனக்குப் பிடித்துள்ளது. அவளுடைய அனைத்து தேவைகளையும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீ சரி என்று சொன்னால் மட்டும் போதும்" என்றதும், ரேவதியும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இசைவு கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சதீஷ் தன் ஆட்டத்தை ஆரம்பித்து, ரேவதி மகளின் பிறந்தநாளுக்கு இரவு 12 மணிக்கு கேக் வாங்கிவந்து கேக் வெட்டச் சொல்லவே, ரேவதியின் கணவர் “இதுபோன்று தேவையில்லாத வேலையெல்லாம் செய்ய வேண்டாம். நான் ஏற்கனவே உன்னிடம் சொல்லியுள்ளேன். பெண் பிள்ளை இருக்கும் இடத்தில் இதுபோன்று வருவதை நிறுத்திகொள்ள வேண்டும்” என்று சண்டை போட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அடுத்த மாதமே அந்தக் குழந்தைக்கு ஒரு கிஃப்ட் கொடுப்பதாகக் கூறி ‘ஐ போன்’ வாங்கி கொடுத்துள்ளார். அதை அந்தக் குழந்தை வாங்க மறுத்துள்ளது. அதையும் ரேவதி வாங்கிவைத்துக்கொண்டு "நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்க போங்க" என்று சொல்லவே சதீஷூம் சென்றுள்ளான். அதன் பிறகு, "நான் உன் மகளுடன் தனியாகச் செல்ல வேண்டும்" என்று கேட்டுள்ளான். அதற்காக ரேவதியிடம் ரூ. 1 லட்சம் பணத்தைச் செலவிற்கு வைத்துக்கொள் என்று கொடுத்துள்ளான். இதனைத் தொடர்ந்து அந்தப் பணத்தை ரேவதியும், ரேவதியின் பெரியம்மாவும் ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக்கொண்டு, சதீஷுடன் செல்ல ரேவதியின் மகளை வற்புறுத்தியுள்ளனர்.
மறுநாள் சதீஷ் வீட்டிற்கு வந்துள்ளான். "போ… போ" என்று ரேவதியும், ரேவதியின் பெரியம்மாவும் வற்புறுத்தவே, கோபமடைந்த ரேவதியின் மகள் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தன்னுடைய அப்பாவிடம் சொல்லியுள்ளார். உடனடியாக வீட்டிற்கு வந்த சிறுமியின் தந்தைக்கும் ரேவதிக்கும் பிரச்சனை முற்றி, ரேவதியை வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாகச் சிறுமியின் தந்தை கூறுகையில், "காவல் நிலையத்தில் இது தொடர்பாகப் புகார் கொடுக்க சென்றபோது, வழக்கு கொடுத்துவிட்டு நீயும், உன் மகளும், மகனும் உயிரோடு இருந்துவிடுவீர்களா? என்று மிரட்டினான். எங்கு என் குழந்தையை ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் நான் புகார் கொடுக்காமல், என்னுடைய குழந்தைகளுக்காக வாழ வேண்டும் என்று வந்துவிட்டேன்.
அதன் பிறகு நக்கீரன் ஆசிரியர் பேசிய வீடியோவைப் பார்த்துவிட்டு, இதுபோன்ற காவலர்களை விடக்கூடாது. என்னுடைய குழந்தைக்கு நடந்ததுபோல வேறு எந்தக் குழந்தைக்கும் நடந்துவிடக்கூடாது என்றுதான் நக்கீரனிடம் வந்தேன்” என்றார். இது தொடர்பாகப் பேசிய ரேவதியின் மகள், “தொடர்ந்து எனக்குப் பாலியல் தொல்லை கொடுத்துவந்தார். அதற்கு என்னுடைய அம்மாவும் உடந்தையாக இருந்தாங்க. இதைக் கேட்ட என்னுடைய அப்பாவைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் கொடுத்தாங்க” என்று கதறி அழுதார். தற்போது காசிமேடு காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்.ஐ. சதீஷ்குமாரிடம் இதுகுறித்து கேட்டபோது பேச மறுத்துவிட்டார்.