ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக இயங்கி வருகின்றன. ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் தற்போது இன்று பிற்பகல் 3 மணியோடு முடிவடைந்த நிலையில், சாமியார் ஒருவர் மனுத்தாக்கல் செய்ய வந்திருந்தது கவனத்தை ஈர்த்தது.
செய்தியாளர்களைச் சந்தித்த அந்த சாமியார் பேசுகையில், ''எனது பெயர் திருமலை ராமலிங்கம். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக தங்கள் முன்னிலையில் நிற்க வந்துள்ளேன். நான் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திலிருந்து வருகிறேன். நான் திருச்சியில் எம்.டெக். டிஸ்கண்டினியூ பண்ணிவிட்டேன். நான் பணிபுரிந்தது பெரியார் மணியம்மை இன்ஜினியரிங் காலேஜ் வல்லம். பிறகு பெரியார் திடலில் பணிபுரிந்தேன். பிறகு அமெரிக்காவிற்கு சென்று விட்டேன். 10 வருடங்கள் வெளிநாட்டில் பணி செய்துவிட்டு ஒரு விபத்து நடந்து உருவம் மாறிவிட்டது.
நான் கற்றவன் அல்ல, எனக்கு நேர்ந்தது விபத்து. அதனால் ஆன்மீகம் சார்ந்து என்னிடம் கேள்வி கேட்காதீர்கள். ஏனென்றால் அது பற்றி தெரியாது. சமச்சீர் கல்வி என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. சமச்சீர் கல்வி என்று ஒன்று இருந்தால், அதற்கு மேல் எந்த கல்வியும் இருக்கக் கூடாது. அப்பொழுதுதான் சமூக நீதி பாதுகாக்கப்படும். சமச்சீர் கல்வி என்பதும் ஒரு போர்வையே. காரணம் அதன் கீழ் படிக்காதவர்கள்தான் இருக்கிறார்கள். எனவே, எது உயர்ந்த கல்வியோ அதை சமமாக அனைவருக்கும் அளிக்கவேண்டும்'' என்றார்.