
சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவன் கலந்துகொண்டார். இதில், ஈழப் போரில் உயிர் மாண்ட பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள், போராளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் அவர்களின் படங்களுக்கு நினைவு தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், அவர் உரையாற்றுகையில், “தமிழீழ விடுதலை களம் தமிழ்நாட்டுக்கு அந்நியமான களம் அல்ல; விடுதலைச் சிறுத்தைகளுக்கும் அந்நியமான களம் அல்ல. தொடக்கக் காலத்தில் இருந்து தமிழீழ விடுதலைக்கு அறப்போராட்டம் நடத்தி வருகிற கட்சி விடுதலைச் சிறுத்தைகள் எனப் பெருமையாகக் கூறிக் கொள்கிறோம். திமுக அரசு இருக்கும்போது ஈழப்போரை நிறுத்து என இந்திய அரசுக்கு முதல் குரல் கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
அப்போது நான்கு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்த போது எந்த தமிழ்த்தேசியவாதிகளும், ‘இந்த போராட்டத்தை விடாதே. தொடர்ந்து நடத்து’ எனக் கூறவில்லை. எல்லாரும் பொங்கல் கொண்டாடிய போது போரை நிறுத்த சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அப்போது எனக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை. நான்கு நாட்களுக்கு பிறகு அதனை முடித்து வைக்க பாமக தலைவர் ராமதாஸ் வந்தார். அவரை குற்றம் சொல்லவில்லை. அவர், ‘நீங்கள் இருக்க வேண்டிய தேவை உள்ளது. உடம்பை கெடுத்துக்க வேண்டாம்’ என கூறி, ‘நாம் இரண்டு பேரும் சேர்ந்து போராடுவோம்’ என உத்தரவாதம் அளித்தார்.
அப்போது உளவுத்துறை திருமாவளவன், நடராஜன், நெடுமாறன், ராமதாஸுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க சதி வேலை செய்கிறார்கள் என கலைஞரிடம் கூறினார்கள். போராட்டத்திற்கு எது முக்கியமோ அதன் அடிப்படையில் தான் முடிவு எடுக்கப்பட்டது. தேர்தல் கணக்கு போட்டு போராட்டத்தை முன்னெடுக்கும் இயக்கமல்ல விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அதனால்தான் போகிறப்போக்கில் எடப்பாடி பழனிசாமி மதுவிலக்கை எதிர்த்துப் போராடத் தயாரானால் நாங்களும் போராடுவோம் எனக் கூறினேன். தேர்தல் கணக்கு பார்த்து, கூட்டணி கணக்கு பார்த்து அரசியல் செய்கிற இயக்கமல்ல விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
கலைஞர் ஆட்சியில் இருந்தபோதே அதிமுக கூட்டணியில் இருந்த ராமதாஸ், நெடுமாறன், வைகோ உள்ளிட்டவர்களுடன் இணைந்து பயணப்பட்டவன் நான். இதனை யாரும் பாராட்டமாட்டார்கள். இது ஒரு மாறுபட்ட அணுகுமுறை. இந்த துணிச்சலை யாரும் அங்கீகரிக்கமாட்டார்கள். இது சாதாரணமாக எடுக்கப்பட்ட முடிவு இல்லை. தீர்க்கமாக, உணர்வுப்பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவு. தமிழீழ விடுதலையை ஆதரிப்பது இனவாதத்தை ஆதரிப்பது அல்ல. ஒரு சிறுபான்மையை பெரும்பான்மை ஒடுக்கும்போது அதனை எதிர்ப்பது ஒரு ஜனநாயக சக்தியின் கடமை. அது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இருக்கிறது.
இங்கு சங்பரிவார் கும்பல் ஒரு மொழி, ஒரு கலாச்சாரத்தை தூக்கிப் பிடிக்கப் பார்க்கிறது. இலங்கையிலும் இதேதான் நடைபெற்றது. அங்கு சிங்களம், பௌத்த பேரினவாதம்; இங்கு இந்து, இந்தி பேரினவாதம். இதை இப்படியே விட்டால் இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியாவில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை தமிழ் ஈழத்தில் செய்தது போல் படுகொலை செய்வார்கள். ஆர்.எஸ்.எஸ், சங்பரிவாரத்தை வீழ்த்தாவிடில்; பாஜகவை ஆட்சிக்கட்டிலில் இருந்து அப்புறப்படுத்தாவிடில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை போல் இந்தியாவிலும் நடைபெறும்.
அங்கேயும் வெறுப்பு அரசியல், இங்கேயும் வெறுப்பு அரசியல். எனவேதான் ஆளுநர் சனாதனத்தை பாதுகாக்கும் விதமாக சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சனையை பற்றி பேசி வருகிறார். கன்னித்தன்மை பரிசோதனையை பாவச்செயல் என்கிறார். ஆனால், 6 வயது, 10 வயது, 12 வயது சிறுமிகளை பலவந்தப்படுத்தியது பாவமல்ல என்கிறார். ஏனென்றால் மனுஸ்மிருதியில் அப்படித்தான் உள்ளது. சாமியார்கள் எல்லாம் சின்ன சின்ன சிறுமிகளை கல்யாணம் செய்துகொண்டதால் கைது செய்யப்படுகிறார்கள் என்றால் அந்த மதம் பாலியல் திருமணங்களை நியாயப்படுத்துகிறது. மனுஸ்மிருதி இதை சட்டப்பூர்வமாக அனுமதிக்கிறது.
புரட்சியாளர்கள் நடமாடிய மண்ணில் சனாதன சங்கிகள் நடமாடுகிறார்கள். தமிழீழ விடுதலையை விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து பேசுவோம். அதன் அரசியலை அடைகாப்போம், போராட்டத்தை முன்னெடுப்போம், தமிழ் ஈழம் வெல்லும், அதனை காலம் சொல்லும்” எனப் பேசினார்.
இந்த கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., கவிஞர் யுகபாரதி, மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, மாவட்டச் செயலாளர் பாலா. அறவாழி, கடலூர் மாநகராட்சி துணைத் தலைவர் சிந்தனைச்செல்வன் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1000-திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த பிறகு திருமாவளவன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் ஜூன் 26 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இளையபெருமாளின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் காட்டுமன்னார்கோவிலில் நடைபெறுகிறது என்றும், அதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் 20 இடங்களில் இளைஞர்கள் மாவட்டச் செயலாளராக மே 18-ஆம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்தார்.