Skip to main content

“நான் எங்கும் ஓடி ஒளியவில்லை” - பரபரப்பு வீடியோ வெளியிட்ட மகாவிஷ்ணு!

Published on 06/09/2024 | Edited on 06/09/2024
I did not run anywhere Mahavishnu released a sensational video

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஒரே நேரத்தில் சொற்பொழிவு நடத்தப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற அடிப்படையில் சொற்பொழிவை நடத்த மகாவிஷ்ணு என்பவர் அழைத்துவரப்பட்டுள்ளார். 'தன்னை உணர்ந்த தருணங்கள்' என்ற தலைப்பில் அவர் உரையாற்றும்போது முழுக்க முழுக்க ஆன்மீகம் தொடர்பான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். மேலும் உங்களுக்கு யோக தீட்சை தருகிறேன் என்று தெரிவித்ததோடு மறுபிறவி குறித்தும் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார். கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது எனவும் பேசியிருந்தார். 

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் மகாவிஷ்ணு விடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், “நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. ஓடி ஒளிய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. என்னைப் பற்றி தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. அதில் தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகிறது. இந்தியா உட்பட ஆறு நாட்கள் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்குத் தொடர்ச்சியாக யோகா பயிற்சிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அசோக் நகர் பள்ளியில் காலையிலும்,  மதியம் சைதாப்பேட்டை பள்ளியில் மதியமும் நிகழ்ச்சி முடிந்த  அடுத்த நாள் நான் ஆஸ்திரேலியா கிளம்பி வந்து விட்டேன். 

I did not run anywhere Mahavishnu released a sensational video

நான் எதற்காக ஓடி ஒளிய வேண்டும். ஓடி ஒளியக்கூடிய அளவுக்கு அப்படி என்ன கருத்தை நான் சொல்லிவிட்டேன். சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் புகார் அளித்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். இதை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளார்களா அல்லது பதிவு செய்யப் போகிறார்களா என்று தெரியவில்லை. மேலும் பரம்பொருள் பவுண்டேஷன் அலுவலகத்திலும் திருப்பூரில் உள்ள எனது இல்லத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அவர்களது வேலையை காவல்துறையினர் சரியாகச் செய்கிறார்கள். அதில் எந்த தவறும் கிடையாது. 

எனது விளக்கத்தை அளிக்கக் கடமை இருக்கிறது. எனவே நாளை அதாவது ஏழாம் தேதி மதியம் 1.10 மணிக்குச் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறேன். காவல்துறையினர் மீதும் இந்தியச் சட்டங்கள் மீதும் மிகுந்த நம்பிக்கை உடையவன் நான். அதன் அடிப்படையிலும் தார்மீக அடிப்படையிலும் காவல்துறையினர் மீது உள்ள நம்பிக்கையின் அடிப்படையிலும் நேரில் சென்று விளக்கம் அளிப்பேன். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதையும் பார்க்க முடிந்தது. அவரது கோபத்தையும் சீற்றத்தையும் மிகத் தெளிவாகக் காண முடிகிறது. அவருக்கு விளக்கம் கொடுக்கும் அளவுக்கு எனக்கு அறிவு தெளிவு இருக்கிறதா எனத் தெரியவில்லை. அதனால் எனக்குத் தெரிந்த விஷயங்களைச் சென்னையில் நான் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். என்னைக் குறித்து ஒரு புகார் வந்திருக்கிறது. அது தொடர்பாக விளக்கம் அளிக்கத் தமிழகத்தில் இருக்க வேண்டும்” எனப் பேசியுள்ளார்.

சார்ந்த செய்திகள்