தமிழ்நாட்டில் ரப்பர் தோட்டங்கள் உள்ள ஒரே மாவட்டம் கன்னியாகுமரி. இங்கு உற்பத்தி செய்கிற ரப்பர் பால்தான் ஆசியாவிலேயே தரமானது என்ற பெருமையும் இன்றுவரை நிலைத்து நிற்கிறது. 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட அரசு ரப்பர் தோட்டத்தில், சுமார் 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துவருகிறார்கள். ஒருதுளி மழை பெய்தால் கூட ரப்பர் மரங்களிலிருந்து ஒரு சொட்டு பால் கூட வடித்து எடுக்க முடியாது. இதுதான் ரப்பர் தோட்டம் மற்றும் ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நிலைமை.
இந்த மாதிரி நிலையில்தான் கடந்த 3 மாதங்களாக குமரியில் கொட்டித் தீர்க்கும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கிறார்கள். ரப்பர் மரங்கள் அடர்த்தியாகவும் அதிகமாகவும் உள்ள கீரிப்பாறை, பெருஞ்சாணி, பேச்சிப்பாறை, மணலோடை, சிற்றார், பரளியாறு, காளிகேசம், குற்றியார், கோதையார், மயிலார், மருதம்பாறை போன்ற பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களிலும் சாலைகளிலும் வெள்ளம் நிரம்பி பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் ரப்பர் பால் வடியும் சிரட்டைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்த நிலையில் நம்மிடம் பேசிய தொழிலாளி ஸ்டீபன், “பருவமழை காரணமாக கடந்த 3 மாதங்களில் 12 நாட்கள்தான் வேலை செய்ய முடிந்தது. மற்ற நாட்களில் தொடர்ந்து பெய்யும் மழையால் தோட்டத்துக்குப் போக முடியாமல் வீட்டுக்குள்ளேயே கிடக்கிறோம். மாதம் முழுவதும் வேலை செய்தால்தான் எங்களுக்கு சம்பளம் கிடைக்கும். ஆனால், மழையின் காரணமாக வருமானமின்றி செலவுக்குப் பணம் இல்லாமல் கஷ்டப்படுறோம். அரசு எங்க நிலைமையைப் பற்றி கொஞ்சமும் புரிந்துகொள்ளவில்லை. அரசு தோட்டத்தில் வேலை செய்தாலும் தினக்கூலியாகவேதான் எங்க பொழப்பு இருக்கிறது.” என்றார்.
குமரி மாவட்ட தோட்டத் தொழிலாளர்கள் சங்க சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் பொன்மனை வல்சகுமார், “எவ்வளவு வலியுறுத்தியும் மழைக்காலங்களில் இந்தத் தொழிலாளர்களின் நிலையை அரசு கவனிக்கவில்லை என்ற குறை உள்ளது. கடலில் மீன் பிடிக்கும் தொழிலாளர்களுக்குக் கூட தடைக்கால நிவாரண உதவி வழங்கப்படுகிறது. மழை என்பது யதார்த்தமான நிலை. அந்த நேரத்தில் இங்கிருக்கிற அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. மலையோரப் பகுதிகளில் இருக்கிறவங்கதானே நமக்கென்ன கவலையின்னு அதிகாரிகள் இருக்கிறாங்க. இந்த தொழிலாளர்களுக்குப் பஞ்சகால நிவாரண உதவி என்கிற முறையில் அரசு உதவி செய்தால்தான் அது பெரிய உதவியாக இருக்கும். மேலும், ரப்பர் தோட்டம் உள்ள தொகுதியின் எம்.எல்.ஏ. ஆகவும் மந்திரியாகவும் இருக்கும் மனோ தங்கராஜ் அதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காததுதான் கவலையாக உள்ளது” என்றார்.