Skip to main content

ஹைட்ரோ கார்பன் நிறுவனங்களின் கூலிப்படையா அரசு? ராமதாஸ்

Published on 16/10/2018 | Edited on 16/10/2018
ramadoss statement



தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால், மறுபுறத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடும் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகின்றனர். ஹைட்ரோ கார்பன் நிறுவனங்களின் கூலிப்படையா அரசு? என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் 24 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடியதாக பொய்யான வழக்கும் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
 

சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் பெரும் தீங்கை விளைவிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக உலகம் முழுவதும்  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உலகின் பல நாடுகளில் மொத்தம் 90 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றின் தொடர்ச்சியாகவும் காவிரி பாசன மாவட்டங்களை சிதைத்து பாலைவனமாக்கும் நோக்குடன் செயல்படுத்தப்படவுள்ள 3 ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கைவிட வலியுறுத்தியும் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பரப்புரை செய்யப்பட்டது. ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் ஏற்படும் தீமைகளை விளக்கும் இந்த பரப்புரையின் போது துண்டறிக்கை வழங்கப்பட்டதைத் தவிர வேறு எதுவும் செய்யப்படவில்லை.
 

ஆனால், நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்ச்செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி, முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் அய்யப்பன். மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன் பால தண்டாயுதம் உள்ளிட்ட 24 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது பொது இடங்களில் ஐந்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்ததாகவும், கலைந்து செல்ல மறுத்ததாகவும் குற்றஞ்சாட்டி இந்திய தண்டனைச் சட்டத்தின் 151&ஆவது பிரிவில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோத செயல் மட்டுமின்றி, உரிமைக்குரலை அப்பட்டமாக ஒடுக்கும் முயற்சியும் ஆகும்.
 

காவிரி பாசன மாவட்டங்களில் சுமார் 200 இடங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் கிணறுகளைத் தோண்டி வைத்துள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கச்சா எண்ணெயைக் கொண்டு செல்வதற்காக பல இடங்களில் விளைநிலங்களைத் தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளிலும் ஏராளமான இடங்களில் குவாரிகள் அமைக்கப்பட்டு மணல் கொள்ளை அடிக்கப்படுகிறது. அதேநேரத்தில் இரு ஆறுகளிலும் தடுப்பணைகளை கட்டும் திட்டத்தை செயல்படுத்த அரசு மறுக்கிறது. இத்தகைய சூழலில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களும் செயல்படுத்தப் பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாக மாறுவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.
 

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்க வேண்டியது அங்கு வாழும் ஒவ்வொருவரின் கடமை ஆகும். அதைத் தான் கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியினரும் பசுமைத்தாயகம் அமைப்பினரும் செய்தார்கள். அவர்களின் பணி பாராட்டப்பட வேண்டியதாகும். ஆனால், மத்திய அரசுக்கு கங்காணியாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த உரிமம் பெற்றுள்ள வேதாந்தா போன்ற நிறுவனங்களின் கூலிப்படையாகவும்  செயல்பட்டு வரும் பினாமி அரசு, இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் விழிப்புணர்வு பரப்புரை செய்தவர்களை கைது செய்து கொடுமைப்படுத்தியிருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு இதைவிட மிக மோசமான நம்பிக்கைத் துரோகத்தை எவராலும் இழைக்க முடியாது.
 

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வு துண்டறிக்கைகளை  மக்களிடம் குழுவாக சென்று தான் வழங்க முடியும். அவ்வாறு கொடுத்ததற்காகத் தான் அவர்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின் 151&ஆவது பிரிவின் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மைக்காலத்தில் இந்த சட்டப்பிரிவு வேறு எங்கும் பயன்படுத்தப்பட்டதாக நினைவில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்களுக்கு  எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராகத் தான் இந்த சட்டப்பிரிவு அதிக முறை ஏவப்பட்டது. இப்போது இந்த கொள்ளையர் ஆட்சியில் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக அறவழியில் பரப்புரை செய்த பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது 151&ஆவது சட்டப்பிரிவு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது பினாமி அரசுக்கு எதிராக நடப்பது இரண்டாம் விடுதலைப்போர் என்பதையே இது காட்டுகிறது.
 

தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால், மறுபுறத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடும் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகின்றனர். அவர்களின் இரட்டை வேடம் வெகுவிரைவில் மக்களிடம் அம்பலமாகி விடும். காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் ஆட்சியாளர்களுக்கு அக்கறை  இருந்தால் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழக அரசு அனுமதிக்காது என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும். பா.ம.க.வினர் மீதான வழக்குகளை அரசு திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்