விழுப்புரம் அருகே உள்ளது வி. அரியலூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் ராஜகுமாரன் (வயது 35). இவருக்கும் லாதா (வயது 28) என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதன் மூலம் இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணமானவுடன் இவர்கள் இருவரும் விழுப்புரம் தந்தை பெரியார் நகரில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் ராஜகுமாரன் விழுப்புரம் புதுச்சேரி வழித்தடத்தில் ஓடும் ஒரு தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார் அதோடு ஓய்வு நேரத்தில் விழுப்புரத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் அதிகாரிகளுக்குத் தற்காலிக கார் ஓட்டுனர் பணிக்கும் சென்று வந்துள்ளார். இப்படி ஆவின் நிறுவனத்தில் பணி செய்து வரும்போது அங்கே ஏற்கனவே டிரைவராக வேலை பார்த்து வந்த வழுதரெட்டியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் இவருக்கு அறிமுகமானார்.
![bus driver](http://image.nakkheeran.in/cdn/farfuture/5Kl765yLJfMjupI_phMsCKKM8OYEWTXfown5PR4KQc4/1584594736/sites/default/files/inline-images/v4321.jpg)
ரஞ்சித் ராஜகுமாரன் லதா
இருவரும் அடிக்கடி சந்தித்து நெருங்கிய நண்பர்களாக பழகியதன் விளைவாக ரஞ்சித், ராஜகுமாரன் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இந்தப் பழக்கம் ராஜகுமாரன் மனைவி லதா - ரஞ்சித் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நெருக்கம் காலப்போக்கில் இருவருக்கும் இடையே தகாத உறவாக மாறியது. ராஜகுமாரன் டிரைவர் பணிக்குச் சென்ற பிறகு அடிக்கடி ராஜகுமாரன் வீட்டிற்கு ரஞ்சித் வந்து லதாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த தொடர்பு அந்த வீட்டின் உரிமையாளருக்கு தெரியவரவே அவர் ராஜகுமாரனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராஜகுமாரன் மனைவி லதாவைக் கண்டித்ததோடு அங்கிருந்து தனது சொந்த ஊரான வி.அரியலூருக்கு அழைத்துவந்து குடித்தனம் நடத்தி வந்தார்.
தன்னிடம் இருந்து லதா பிரிந்து விடுவார் என்று பயத்திலும், குழந்தையின் எதிர்காலம் கருதியும் சொந்த ஊருக்கு மனையியை அழைத்து வந்துள்ளார் ராஜகுமாரன். அப்படியும் லதா - ரஞ்சித் இடையேயான உறவு நிற்கவில்லை. ராஜகுமாரன் இல்லாத சமயத்தில் ரஞ்சித் அடிக்கடி அரியலூருக்கே வந்து ராஜகுமாரன் வீட்டில் லதாவுடன் உல்லாசமாக இருந்து விட்டு சென்றுள்ளார். இது அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்கும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரன் டிரைவர் பணிக்குச் சென்றுவிட்டு இரவு 10 மணிக்கு மேல் விழுப்புரத்தில் ஹோட்டலில் டிபன் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். மறுநாள் காலை லதா, தனது கணவர் இறந்து கிடப்பதாக அழுது சத்தம் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இதையடுத்து ராஜகுமாரன் உறவினர்கள் ஓடி வந்துள்ளனர். ராஜகுமாரன் மரணம் எப்படி நடந்தது என்று யாரும் யூகிக்க முடியாத நிலையில், விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் விரைந்து வந்தனர். அப்போது இறந்து கிடந்த ராஜகுமாரன் அருகில் இரவு வாங்கிவந்த டிபன் பொட்டலம் பிரிக்கப்படாமல் அப்படியே கிடந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லதாவை கணவர் இறந்தது சம்பந்தமாக எழுத்து மூலமாக புகார் அளிக்க சொல்லி அவரை தாலுகா காவல் நிலையத்துக்கு வரவழைத்தனர்.
அங்கே அவரிடம் விசாரணை செய்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். இதையடுத்து ராஜகுமாரன் வீட்டுக்கு அருகில் இருந்தவர்களிடம் காவல்துறை விசாரணை செய்ததில் ஒரு இளைஞர் ராஜகுமாரன் வீட்டில் இல்லாத சமயத்தில் அடிக்கடி வந்து செல்வதாக கூறியுள்ளனர். லதாவின் முரண்பாடான பேச்சின் மூலம் பலத்த சந்தேகம் அடைந்த காவல்துறையினர், உரியமுறையில் லதாவிடம் விசாரணை செய்ததில் லதா ரஞ்சித்துடன் சேர்ந்து கணவர் ராஜகுமாரனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
போலீசாரிடம் லதா அளித்த வாக்குமூலத்தில் சம்பவத்தன்று ராஜகுமாரன் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது ஏற்கனவே வீட்டில் ரஞ்சித்தும் நானும் ஒன்றாக இருந்ததை பார்த்த ராஜகுமாரன் கோபம் அடைந்தார். எங்களுக்குள் காரசாரமான சண்டை நடந்தது. உடனே கதவை உட்புறம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு நான் என் கணவர் ராஜகுமாரன் தலையில் சுத்தியால் அடித்தேன், ரஞ்சித் ராஜகுமாரன் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கி கொலை செய்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து ராஜகுமாரனை கொலை செய்த பிறகு ரஞ்சித் எங்கள் வீட்டுக்குப் பின்பக்க வழியாக வெளியேறி விட்டார். காலையில் தூங்கி எழுந்ததும் எதுவும் நடக்காததைப்போல என் கணவர் இறந்து விட்டதாக கூறி கதறி அழுது அக்கம் பக்கத்தினரை வரவழைத்தேன் என லதா போலீஸாரிடம் எந்தவித தயக்கமும் பயமும் படபடப்பும் இன்றி தெளிவாக வாக்குமூலம் அளித்துள்ளார்
இதையடுத்து லதாவையும் அவரது கள்ளக்காதலன் வழுதரெட்டி ரஞ்சித்தையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தின் மூலம் சிறைக்கு அனுப்பி உள்ளனர். ராஜகுமாரன் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனைக்குப் பிறகு அவரது உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இந்தக் கள்ளக்காதல் கொலையில் ரஞ்சித் - லதா ஆகிய இருவர் மட்டும் செய்தார்களா? அல்லது இவர்களுடன் சேர்ந்து வேறு யாரேனும் இந்தக் கொலையை செய்தார்களா? வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகாத உறவால் செய்யப்படும் கொலைகள் வேதனை தருவதாக உள்ளது. கள்ளக்காதலர்கள் தங்கள் சுகத்தை மட்டுமே பெரிதாக எண்ணி கொலை செய்யத் துணிகிறார்கள். அவரவர்களுக்கு குழந்தைகள், உறவுகள் இருக்கின்றன. அவர்கள் நிலை என்னாகும் என்பதைப்பற்றி சிந்திக்க மறுக்கிறார்கள்.