Skip to main content

என்.எல்.சி விபத்துக்கு ஊழலே காரணம்! - நடவடிக்கை கோரும் மனித உரிமை அமைப்புகள்!

Published on 13/07/2020 | Edited on 13/07/2020

 

human rights activists seeks strict action against corrupt officials who were responsible for NLC boiler accident

 

என்.எல்.சி கொதிகலன் வெடித்துத் தொழிலாளர்கள் உயிரிழப்பிற்குக் காரணமான ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

 

ஜூலை 1 அன்று கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் 5-ஆவது அலகிலுள்ள கொதிகலன் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 17 பேர்  தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அப்பலல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.  அவர்களில் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.  

 

இந்நிலையில் என்.எல்.சி விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழப்பிற்கு ஊழல் அதிகாரிகள் தான் காரணமென்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

 

இதுதொடர்பாக தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மக்கள் கல்வி இயக்கத் தலைவர் பேராசிரியர் பிரபா.கல்விமணி (எ)கல்யாணி, மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், நகரக் கல்வி மேம்பாட்டுக் குழுச் செயலாளர் இரா.முருகப்பன் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:-  

 

"என்.எல்.சி. நிறுவனத்தில் கொதிகலன் வெடித்து 3 பொறியாளர்கள் உட்பட 14 தொழிலாளர்கள் உயிரிழப்பிற்கு ஊழலே காரணம் என்பதால், ஊழல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறோம்.

 

இதேபோல், இதற்கு முன்னர் கடந்த 07.05.2020 அன்று கொதிகலன் வெடித்து 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 

 

வெடித்துச் சிதறிய கொதிகலன் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் இருந்து வாங்கப்பட்டது என்றாலும், அதனைப் பராமரிக்கும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதாவது அனல் மின் நிலையம் 2-இல் உள்ள கொதிகலன்  பகுதியில் கரித்துகள் அகற்றும் ஆண்டுப் பராமரிப்புப் பணி (Yearly Maintanance Work) ‘யோகேஸ் இன்ஜினியரிங்’ என்ற தனியார் நிறுவன ஒப்பந்தக்காரர் ராஜகோபால் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர் அங்குள்ள அதிகாரிகளின் ஆணைக்கு ஏற்பவும், ஒப்பந்த விதிகளின் படியும் வேலை செய்வதில்லை. ஏனென்றால், இவர் மனிதவளத்துறை இயக்குநர் விக்ரமனின் ஆதரவுப் பெற்றவர். இயக்குநர் விக்ரமன் பல்வேறு ஊழல், முறைகேடுகள் குற்றச்சாட்டில் சிக்கியவர். 

 

நெய்வேலி அனல் மின் நிலையங்களிலேயே அதிக மின் உற்பத்தியைக் கொடுக்கும் அனல் மின் நிலையம் 2-இல் முழுநேர மனிதவள அதிகாரி இல்லாமல், அதிகப் பணி அழுத்தம் உள்ள தொழில் உறவு அதிகாரியே கூடுதல் சுமையாக இப்பணியைச் செய்து வருகிறார்.

 

மேலும், தற்போது துணைப் பொது மேலாளர் (மக்கள் தொடர்பு) மாதவராஜ், துணைப் பொதுமேலாளர் (பாதுகாப்பு) செல்லச்சாமி ஆகியோர் என்.எல்.சி. நிறுவனத்தின் முழுச் செலவிலேயே தொழிலகப் பாதுகாப்புப் பயிற்சியை முடித்தவர்கள். ஆனால், மேற்சொன்ன தொழிலகப் பாதுகாப்புப் பயிற்சிப் பெற்ற அதிகாரிகளை மனிதவளத்துறை இயக்குநர் விக்ரமன் பாதுகாப்புப் பணி அல்லாத பிற பணிகளுக்குப் பணியமர்த்தி உள்ளார். மேற்சொன்ன அதிகாரிகள் இருவரும் விக்ரமனின் அனைத்து சட்ட விரோதச் செயல்களுக்கும் துணைப் போகிறவர்கள்.

 

மேலும், முதல் கொதிகலன் வெடித்து 5 தொழிலாளர்கள் இறந்த போதே இந்த இரு அதிகாரிகளையும் தொழிலகப் பாதுகாப்புப் பணிக்கு மாற்றி நியமித்து இருக்க வேண்டும். ஆனால், இயக்குநர் விக்ரமன் அவ்வாறு செய்யவில்லை. 

 

இதனால், மேற்சொன்ன அதிகாரிகளைப் போன்று முழுநேரத் தொழிலகப் பாதுகாப்புப் பயிற்சி இல்லாத கீழ்நிலை அதிகாரிகளே தொழிலகப் பாதுகாப்பு அதிகாரிகளாகவும் பணி செய்து வருகின்றனர். இதனால்தான், மீண்டும் மீண்டும் கொதிகலன் வெடித்து மிகப் பெரிய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.  தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் என்.எல்.சி. நிர்வாகம் தொழிலாளர்களைப் பாதுகாக்கத் தவறியதால் 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் ஊழல் அதிகாரிகளின் லாப நோக்கினால் வந்த விளைவுகளே ஆகும். 

 

http://onelink.to/nknapp

 

ஆகையால், புகழ்பெற்ற என்.எல்.சி. பொதுத்துறை நிறுவனம் ஊழல் அதிகாரிகளால் சீரழிந்து வருகிறது.  மேலும், இதுபோன்ற கொதிகலன் வெடித்து தொழிலாளர்கள் உயிரிழக்கும்  சம்பவங்களும் தொடர்கின்றன. மனிதவளத்துறை இயக்குநர் விக்ரமன் மீது பல்வேறு ஊழல், முறைகேடுகள் குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் மத்திய, மாநில அரசுகளுக்குப் புகார் அளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

எனவே, என்.எல்.சி. அனல் மின் நிலையங்களில் கொதிகலன்கள் வெடித்து தொழிலாளர்கள் பலியாவதற்கு ஊழலே முதன்மைக் காரணமாகும். தொழிலாளர்களின் உயிரிழப்பைத் தடுக்க ஊழல் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதோடு பணி அமர்த்தம் செய்யும் போது போதிய தொழில்நுட்பம் அறிந்த அதிகாரிகளை அந்தந்தத் தொடர்புடைய துறைகளில் பணி நியமனம் செய்ய வேண்டும். மேலும், கொதிகலன்கள் பராமரிப்புப் பணிகளைத் தனியாருக்கு அளிக்காமல் பொதுத்துறை நிறுவனங்களிடத்திலேயே ஒப்படைக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்