Skip to main content

பிரமாண்ட நடராஜர் சிலை... ஒப்படைப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர் தமிழிசை, நக்கீரன் ஆசிரியர் 

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

 

பத்தாண்டுகால உழைப்பில், நான்குகோடி மதிப்பீட்டில் 23 அடி உயரம், 17 அடி அகலம், 15 டன் எடை கொண்ட உலகிலேயே மிக பிரம்மாண்ட நடராஜர் சிலையை பழமையான விக்ரக அமைப்பிலேயே உருவாக்கி சிறப்பு வழிபாடு நடத்தி, அதனை முறைப்படி தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன், நக்கீரன் ஆசிரியர் ஆகியோர் லட்சுமி நாராயணி பீட அறங்காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

 

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்துள்ள சுவாமிமலை திம்மக்குடி கிராமத்தில், கேஸ்ட் இன் பிரான்ஸ் கிரியேட்டிவ் என்கிற சிற்ப சாலையை வரதராஜ் என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அங்கு முக்கால் அடி முதல் 11 அடி உயரம் வரையிலான பல்வேறு சிலைகளை தயார் செய்து இந்தியா உள்ளிட்ட  பல நாடுகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

 

கோனேரிராஜபுரத்தில் உள்ள 8 அடி உயரத்துடன் உள்ள பிரமாண்ட நடராஜர் சிலைதான் இதுவரை உலகிலேயே பெரிய ஐம்பொன் நடராஜர் சிலையாக இருந்து சிறப்பு பெற்றுவருகிறது. இந்த சாதனையை முறியடிக்க கடந்த 2006ம் ஆண்டு அதைவிட பெரிதாக 11 அடி உயரம் கொண்ட ஐம்பொன் நடராஜர் சிலையை இந்திய அரசின் ஏற்பாட்டில், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் அணு ஆராய்ச்சி மையத்தில் வைப்பதற்காக தயார் செய்துகொடுத்து புதிய சாதனையை படைத்தார். அந்த சிலையே இதுவரை உலகில் மிகப்பெரிய நடராஜர் சிலையாக இருந்தது. இருப்பினும் தனது சாதனையை தானே முறியடித்து புதிய சாதனை படைத்திட திட்டமிட்டு பல இடங்களில் உதவியை நாடினார். பிறகு நக்கீரன் ஆசிரியரின் உதவியோடு 23 அடி உயரத்தில் நடராஜர் சிலையை அதுவும் ஒற்றை வார்ப்பில் செய்துமுடித்திருக்கிறார்.

 

கடந்த 2010ம் ஆண்டில் சிலை தயாரிக்கும் பொறுப்பை ஒருவர் ஏற்றுக் கொண்டுள்ளார். முதற்கட்ட பணிகளை தொடங்கி 2012ம் ஆண்டு வரை அந்தப் பணி நடைபெற்றது, இதன் பிறகு பொறுப்பேற்ற நபரால் தொடர்ந்து இந்த முயற்சியில் உதவிட  முடியாமல் போக, இனி இந்த சிலை அவ்வளவுதானா என சோர்வடைந்து போனவருக்கு இரண்டு ஆண்டுக்கு பிறகு நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் மூலம், வேலூர் ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பீடம் கிடைத்துள்ளது. 

 

பிறகு மீண்டும் பணிகள் தொடங்கி சுமார் பத்து ஆண்டுகள் நிறைவில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 25,000 சிற்ப கலைஞர்களின் கடுமையான உழைப்போடு சிலை முழுமை பெற்று அதனை புதுச்சேரி ஆளுநர் தமிழை, மற்றும் நக்கீரன் ஆசிரியரின் முன்னிலையில் வேலூர் லட்சுமி பீடத்தில் ஒப்படைத்திருக்கிறார்.

 

இந்த பிரமாண்டமான நடராஜர் சிலைக்கு சோமவார தினமான செப்டம்பர் 12ம் தேதி மாலை பிரதோஷ வேளையில், நந்தி வாத்தியங்கள் முழங்க, புனித நீர் நிரப்பிய கடங்களை வைத்து தமிழ் முறைப்படி, சிவனடியார்கள் சிறப்பு யாகங்கள் நடத்தினர். இறுதியாக தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதன்மை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் அபிஷேகத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து நக்கீரன் ஆசிரியர், வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் லட்சுமி நாராயணி பீட அறங்காவலர் சுரேஷ் ஆகியோர் சிலையை வடிவமைத்த கலைஞர்கள் ஆகியோருக்கு அபிஷேகம் செய்தும், உதிரி மலர்கள் தூவியும் மரியாதை செய்தனர்.

 

தொடர்ந்து, பிரமாண்டமான நடராஜர் சிலைக்கு சிவனடியார்கள் முன்னிலையில் விபூதி, பால், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதன் பின்னர் மகா தீபாராதனை செய்யப்பட்டது. அப்போது 20க்கும் மேற்பட்ட வெண்புறாக்கள் வானில் பறக்க விடப்பட்டன. உதிரி ரோஜா மலர்கள் தூவ, இப்பிரம்மாண்டமான சிலையை டாக்டர் தமிழிசை சௌதர்ராஜன் முறைப்படி லட்சுமி நாராயணி பீட அறங்காவலர்களிடம் ஒப்படைத்தார்.

 

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன், “23 அடி உயர பிரமாண்ட நடராஜர் சிலையை ஸ்தபதிகள் சீனிவாசன், வரதராஜ் மற்றும் மயூத் ஆகியோர் படைத்திருக்கிறார்கள். இதற்காக இவர்கள் 10 ஆண்டுகள் பொறுமையாக எடுத்துக்கொண்டு ஒவ்வொன்றையும் மிக சிறப்பாக அழகாக வடிவமைத்து, நம் இந்திய கலையை கலாச்சாரத்தை உலக அரங்கிற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற பழமொழிக்கு ஏற்ப இவர்களது பணி அமைந்துள்ளது. அவர்களை பாராட்டுகிறேன். இப்பணிக்கு பக்க பலமாக இருந்த நக்கீரன் ஆசிரியரையும், வேலூர் நாராயணி பீடம் அம்மாவை பாராட்டி மகிழ்கிறேன்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்