நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய வழக்கில் பா.ஜ.க.வின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.
நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய வழக்கில் முன்ஜாமீன் கோரி பா.ஜ.க.வின் ஹெச்.ராஜா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "உயர்நீதிமன்றத்தையும், காவல்துறையினரையும் தவறாகப் பேசியதற்காக ஏற்கனவே நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரி உள்ளதாகவும், திருமயம் கீழமை நீதிமன்றத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டக் குற்றப்பத்திரிகையில் தான் தலைமறைவாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்ட வழக்கில் கீழமை நீதிமன்றம் வரும் ஜூலை 23- ஆம் தேதி அன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது. எனவே, என்னை கைது செய்யும் நடவடிக்கையில் எடுபடாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், "மனுதாரர் ஹெச்.ராஜாவுக்கு கீழமை நீதிமன்றம் 'சம்மன்' அனுப்பியதா? அல்லது பிடிவாரண்ட் அனுப்பியதா?" என கேள்வி எழுப்பி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் ஹெச் ராஜாவுக்கு கீழமை நீதிமன்றம் சம்மன்தான் அனுப்பியிருக்கிறது என்றும், எனவே சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு, அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.