கும்பகோணம், மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் பணியில் இருக்கும் அதிகாரிகள் தொடர்ந்து 5 ஐந்து ஆண்டுகளாக இருப்பதால் தவறுகள் அதிகம் நடக்கிறது என அகில பாரத இந்து மகாசபா அமைப்பினர் கண்டன குரல் எழுப்பியதோடு, உயர் அதிகாரிகளுக்கு தபால் அனுப்பும் போராட்டம் செய்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடந்த தபால் அனுப்பும் போராட்ட நகலில் கூறியிருப்பதாவது, "சுவாமிமலை இணை ஆணையர் மாரியப்பன், கும்பகோணம் கோவில்செயல் அலுவலர் கவிதா, செயல் அலுவலர் மல்லிகா, உள்ளிட்ட இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், ஐந்து வருடங்களுக்கு மேல் கும்பகோணத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.
மற்ற மாவட்டங்களில் மூன்று வருடத்துக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். ஆனால் மயிலாடுதுறை மற்றும் கும்பகோணம் பகுதியில் 5 வருடங்கள் ஆகியும் அதிகாரிகள் மாற்றப்படாமல் இருக்கிறார்கள். மேலும் இவர்கள் மீது நிறைய பண மோசடி குற்றச்சாட்டு இருப்பதோடு சிலை கடத்தல் வழக்கில் கைதான கஜேந்திரனுக்கு சிலை கடத்தல்காரர்களோடு தொடர்புகள் இருப்பதாகவும் பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் இருந்து கொண்டு கோயில் சொத்துக்களை ஆட்டைய போடும் அதிகாரிகளின் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டும் என்று மண்டலச் செயலாளர் இந்திரஜித் என்கிற செல்வா தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன முழக்கமிட்ட முதலமைச்சர் தனிப்பிரிவு வருமானவரி ஆணையர் சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சென்னை ஆகிய பிரிவுகளுக்கு ரிஜிஸ்டர் தபால் அனுப்பினர்.