



அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் பணி சிறக்க அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று மதியம் அண்ணாசாலை தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்தார். மேலும் அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''திமுகவின் இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் அங்கம் பெறுவதற்காகப் பொறுப்பு எடுத்துக் கொண்டார். அவர் சிறப்பாக பணியாற்றுவார் என்பது அனைவருடைய நம்பிக்கை. நிறைய அனுபவங்களைப் பெற்றிருக்கக் கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. கலைஞர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் சிறிய வயதிலிருந்து அவரை உற்றுப் பார்க்கின்ற வாய்ப்பையும், முதல்வர் ஸ்டாலின் துணை முதலமைச்சராகி, மேயராகி, இன்றைக்கு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில் அவரோடு நெருக்கமாக இருந்து நிர்வாகத் திறனைப் பார்க்கின்ற வாய்ப்பையும் பெற்றவர்.
எனவே ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தினுடைய செல்லப்பிள்ளை அவர். கலைஞரின் பேரப்பிள்ளை, எதிர்கால தமிழர்களுடைய முகவரியாகத் திகழக்கூடியவர். எனவே அவர் சிறப்பான முறையில் பணியாற்றி தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ,பேராசிரியர், முரசொலி மாறன் போன்ற தலைவர்கள் எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், திராவிட மாடல் ஆட்சிக்கும் பொறுப்பேற்று இருக்கின்ற நமது தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுடைய வழியில் பயணத்தை மேற்கொள்வார்.
சிறந்த முறையில் திராவிட மாடலுக்கு ஐந்தாம் தலைமுறையாகப் பொறுப்பேற்று இருக்கிறார். இனி நூறு ஆண்டுக் காலம் திராவிடத்தினுடைய பாரம்பரியத்தைக் கட்டிக் காத்து, இன்னும் நூறாண்டு காலத்திற்குக் கழகத்தை எடுத்துச் செல்ல உதயநிதி கழகப் பணி ஆற்றுவார் என்று வாழ்த்துகிறேன்'' என்றார்.