சேலம் அருகே ரவுடி காட்டூர் ஆனந்தன் கொலை வழக்கில் பிடிபட்ட நான்கு ரவுடிகளை ஒரே நாளில் மாவட்டக் காவல்துறை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அருகே உள்ள வலசையூரைச் சேர்ந்தவர் காட்டூர் ஆனந்தன் என்கிற ஆனந்தன் (44). கொலை, ஆள் கடத்தல், அடிதடி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி. கடந்த பிப். 5ம் தேதி இரவு இவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டிப் படுகொலை செய்தது.
இது குறித்து காரிப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் காட்டூர் ஆனந்தனின் உறவினரான குள்ளம்பட்டி பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (40), அவருடைய கூட்டாளிகள் சின்னனூரைச் சேர்ந்த சக்திவேல் (35), வேலம்பட்டியைச் சேர்ந்த அஜித்குமார் (26), கன்னங்குறிச்சியைச் சேர்ந்த மணிகண்டன் (36) உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.
இவர்களில் ரவுடி அன்பழகன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் மீது ஏற்கனவே அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட சில குற்ற வழக்குகள் விசாரணையில் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து இந்த கும்பல் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்து வந்ததாலும் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காரிப்பட்டி காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ், மாவட்ட காவல்துறை எஸ்பி சிவக்குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் பரிந்துரை செய்தனர். அதன்பேரில் அன்பழகன் உள்ளிட்ட நால்வரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதையடுத்து நான்கு பேரையும் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு பேரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணை வழங்கப்பட்டது.