‘இருக்கும் வரை ரத்த தானம்! இறந்த பின் கண் தானம்!’ இந்த வாசகங்களை அரசும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல், சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அவசரமாக ரத்தம் தேவை என்பதால் பல்வேறு தண்ணார்வ அமைப்புகள், இளைஞர்கள் மூலம் ரத்தம் கொடுத்து உயிர்களை காப்பாற்றி வருகின்றனர்.
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அறந்தாங்கி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த வாய் பேச முடியாத மூதாட்டி சகுந்தலாவுக்கு அவசரமாக ரத்தம் தேவை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டையில் இயங்கி வரும் ‘குருதிக்கூடு’ என்ற தன்னார்வ அமைப்பு, மூதாட்டிக்கான ரத்தம் கொடுக்க தயாரானபோது, தகவல் அறிந்து சிறிது நேரத்தில் செம்பாட்டூர் அரசுப் பள்ளி ஆசிரியரான பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் சிவா, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு தனது நண்பரும் சக ஆசிரியருமான வீரமாமுனிவருடன் வந்து ரத்தம் கொடுத்தார்.
பார்வையற்ற மாற்றுத் திறனாளியான ஆசிரியர் சிவா, ரத்ததானம் செய்திருப்பதை கேள்விப்பட்ட மருத்துவக்கல்லூரி டீன் பூவதி மற்றும் சமூக ஆர்வலர்களும் அவரது உயிர் காக்கும் சேவையை பாராட்டினார்கள்.
இது குறித்து ஆசிரியர் சிவா, “பார்வையற்ற மாற்றுத் திறனாளியான எனக்கு முகம் தெரியாத பலரும் பல உதவிகளை செய்திருக்கிறார்கள். அதனால் நாமும் மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இன்று மூதாட்டியின் உயிரை காக்க என் ரத்தம் உதவியுள்ளது. தொடர்ந்து ரத்த தானம் செய்வேன். என்னைப் போல அனைவரும் மற்றவர்களின் உயிர் காக்க ரத்ததானம் செய்யலாம்” என்றார்.
குருதிக்கூடு ரத்த தான அமைப்பினர் கூறும் போது, ‘இந்த அமைப்பு தொடங்கி 3 மாதங்களில் 350 பேருக்கு ரத்த தனாம் செய்திருக்கிறோம். பல கர்ப்பிணிகளுக்கு நெகடிவ் குரூப் ரத்தங்கள் தேவைப்படும் அப்போது மாவட்டம் முழுவதும் உள்ள ரத்த தான அமைப்புகள் மூலம் பெற்று கர்ப்பிணிகளுக்கு கொடுத்து உயிர்களை காத்திருக்கிறோம். இப்போது ஆசிரியர் சிவா தானாக முன்வந்து ரத்தம் கொடுத்து மூதாட்டியின் உயிரை காப்பாற்றியிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதே போல எல்லாரும் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும்’ என்றனர்.