சனாதனத்தை உயர்த்தி பிடிக்கும் வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பொது மேடைகளில் பேசி வரும் நிலையில் அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் அருகே போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் நந்தனார் குருபூஜை விழா இன்று நடைபெற இருக்கிறது. இதற்காக நேற்று இரவு கடலூர் வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். இந்த குருபூஜை விழா முடிந்த பிறகு பூணூல் அணியும் விழா நடைபெற இருக்கிறது. அதிலும் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். இந்நிலையில் நந்தனார் குருபூஜை விழாவில் சனாதனத்தை உயர்த்திப் பிடிப்பதற்காக வந்திருக்கிறார் என ஆளுநருக்கு கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
'ஆளுநர் திரும்பி போக வேண்டும்; சனாதனத்தை தூக்கி பிடிப்பதற்காகவும் சனாதனத்தை வளர்ப்பதற்காகவும் ஆளுநர் செயல்படுகிறார்; நந்தனார் குருபூஜையில் ஒரு பிரிவினைவாதத்தை கொண்டு வருவதற்காக பூணூல் அணியும் விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கிறார்; ஆளுநர் திரும்பிச் செல்ல வேண்டும்' என அவர் வரும் வழியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தொண்டர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே போராட்டம் நடைபெறும் என்ற காரணத்தால் கடலூர் மாவட்ட எஸ்.பி ராஜாராம் தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த குருபூஜை விழாவில் கலந்துகொள்ளும் ஆளுநர் மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும் சென்று அங்கு நடக்க இருக்கும் பட்டமளிப்பு விழாவிலும் கலந்துகொள்ள இருக்கிறார். இப்படி பல நிகழ்வுகளில் கலந்துகொள்ள கடலூர் வந்திருக்கும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.