Skip to main content

“சமூக வலைத்தளங்களில் விமர்சித்தால் கடும் நடவடிக்கை” - ஆளுநர் தமிழிசை எச்சரிக்கை

Published on 06/12/2022 | Edited on 06/12/2022

 

governor tamilisai warne Criticizing uncivilized manner social media will take strict action

 

முதலமைச்சராகவும் பிரதம மந்திரியாகவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 20 ஆண்டுக்கால அரசியல் பயணம் பற்றிய புத்தகத்தின் தமிழாக்கம் செய்யப்பட்ட ‘மோடி@20 நனவாகும் கனவுகள்’ மற்றும் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற இரு புத்தகங்களின் வெளியீட்டு விழா புதுச்சேரி காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்றது.

 

இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் புத்தகங்களை வெளியிட முதலமைச்சர் ரங்கசாமி பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டனர்.

 

அதைத் தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “இந்தியா உலகளவில் உயர்ந்து நிற்க பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். புதுச்சேரிக்கு பல வருடங்களாக மாநில அந்தஸ்து தேவை என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். நரேந்திர மோடி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை வழங்குவார் என்று நம்பிக்கை உள்ளது” என்றார். 

 

அவரை தொடர்ந்து பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு தான் மீனவர்களுக்கென்று தனி துறை உருவாக்கப்பட்டு, அதற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டு, இன்று மீனவர்களுக்குத் தேவையான அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் செய்யப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.

 

governor tamilisai warne Criticizing uncivilized manner social media will take strict action

 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசும்போது, “புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக மாற்ற வேண்டும் என்று தான் அனைவரும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், சிலர் டெஸ்ட் புதுச்சேரியாக மாற்றி வருவதாக விமர்சனம் செய்கிறார்கள். புதுச்சேரியில் ஆட்சியாளர்கள் எதைச் செய்தாலும் அது மக்கள் நலனுக்காகத் தான் இருக்கும். மோடியைப் பற்றிய இந்தப் புத்தகத்திற்கு முகவுரை எழுதிய இளையராஜா பல விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்டார். விமர்சனம் செய்பவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்க்க வேண்டும். மேலும், நாகரிகமற்ற முறையில் விமர்சனங்களை இணையதளத்தில் முன் வைத்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”  என்று குறிப்பிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்