7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரை செய்வது என்று முடிவெடுத்து என்று தமிழக அமைச்சரவைக்கூட்டத்தில் இன்று மாலை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
’’ பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே ஒரு தீர்ப்பை வெளியிட்டிருக்கிறது. ஆகவே, உடனடியாக தமிழக அரசு அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் அவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கிறேன்.
இன்று அமைச்சரவைக் கூடியதில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்க இருப்பதாக செய்தி வந்திருக்கிறது. எனவே, உடனடியாக தமிழக ஆளுநர் அதை நிறைவேற்றக்கூடிய வகையில் குறிப்பாக தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் அதை நிறைவேற்றித் தர வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் கேட்டுக்கொள்கிறேன்.’’