Skip to main content

“அண்ணா பல்கலை.யில் பயிலும் மாணவர்கள் இச்சம்பவம் குறித்து அச்சமடைய வேண்டாம்” - ஆளுநர் ஆர்.என்.ரவி

Published on 28/12/2024 | Edited on 28/12/2024
Governor RN Ravi says about Anna university issue

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரைக் கடந்த 25ஆம் தேதி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. 

இதற்கிடையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என். ரவி இன்று (28.12.2024) ஆய்வு மேற்கொண்டார். ஆளுநருடன், உயர்கல்வித்துறை செயலாளர், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பே பிரதானமானது என்று தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துயரமிகு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, தமிழ்நாடு ஆளுநர் இன்று (28.12.2024) மதியம் 12.30 மணியளவில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவும், மாணவ, மாணவியர்களுடன் உரையாடவும், நமது மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்திட தீர்க்கமான நடவடிக்கைகள் மேற்கொள்வதை உறுதிப்படுத்திடவும் வருகை தந்தார். 

இவ்வாய்வின் போது, தமிழ்நாடு ஆளுநர் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் மூத்த பேராசிரியர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் ஆளுநர்,  மாணவர்களுடன் (பெண்கள் மற்றும் ஆண்கள் தனித்தனியாக) கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடல் வாயிலாக பல்கலைக்கழக வளாகத்தை மிகவும் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு மாணவர்கள் கூறிய கருத்துக்கள், பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை மிகவும் பொறுமையாக கேட்டறிந்தார்.

ஆளுநர், பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனே பிரதானமானது என்று கூறியதுடன், மாணவர்கள் எழுப்பிய பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். அண்ணா பல்கலைகழகத்தில் பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இச்சம்பவம் குறித்து அச்சம் அடைய வேண்டாம் என்றும், மேலும் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பாதுகாப்புச் சூழலை மேம்படுத்திடவும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்