Skip to main content

“ராணுவத்தை இறக்கி வடகிழக்கு மாநிலங்களில் பிரிட்டிஷார் கட்டாய மதமாற்றம் செய்தனர்” - ஆளுநர் ஆர்.என்.ரவி

Published on 04/01/2023 | Edited on 04/01/2023

 

governor ravi talks about north eastern states in chennai exhibition 

 

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தென்னகப் பண்பாட்டு மையத்தின் சார்பில் "ஆக்டேவ்  2023" என்ற பெயரில் வடகிழக்கு மாநிலங்களின்  கலைஞர்களின் கலைநிகழ்ச்சியையும், பொருட்காட்சியையும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கிவைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "வடகிழக்கு மாநில கலைஞர்கள் தமிழகத்தின் பாரம்பரியத்தைப் பற்றி தெரிந்துகொள்ள இந்த நிகழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். கலை மற்றும் ஆன்மீகத்தின் தலைநகராக தமிழகம் திகழ்கிறது. இந்தியாவின் அழகு "வேற்றுமையில் ஒருமைப்பாடு காண்பது" தான். வடகிழக்கு மாநிலங்களில் காணப்படும் வேற்றுமை மிகவும் அழகானது. வடகிழக்கு மாநிலங்களின் உணவை மற்ற மாநில மக்களும் உண்ண வேண்டும். இதன் மூலம் அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளலாம். வடகிழக்கு மாநிலங்கள் மிகவும் அழகானவை. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் நான்கு சதவீத மக்கள் அங்கு வசிக்கின்றனர்.

 

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக வடகிழக்கு மாநில மக்கள் கடுமையாகப் போராடினர். அதனைத் தொடர்ந்து ராணுவத்தை இறக்கி, வடகிழக்கு மாநிலத்தில் கட்டாய மதமாற்றம் செய்தனர். முன்பெல்லாம் வடகிழக்கு மாநிலங்கள் என்றால் கலவரம் நடக்கும். ஆபத்தான இடம் எனக் கூறி வந்தோம். அங்குப் பிரச்சனை இருந்தது உண்மைதான். ஆனால், அந்த நிலை தற்போது படிப்படியாக மாறியுள்ளது.  இதனால் வடகிழக்கு மாநிலங்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகின்றன. புதிய விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், சாலை வசதி, உணவு விடுதிகள் என வளர்ச்சி அடைந்து வருகிறது” எனப் பேசினார். இந்நிகழ்வில் தமிழக சுற்றுலாத்துறைச் செயலர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்