கஜா புயலால் சுருட்டி வீசப்பட்ட மின்கம்பங்களை மழையிலும், பனியிலும் துயரங்களை பொருட்படுத்தாமல் சீரமைப்புப்பணிகளில் ஈடுபட்டு வரும் மின்துறை ஊழியர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்கின்றனர் மீட்புப் பணிகளில் இருக்கும் ஊழியர்கள்.
கடந்த 15ம் தேதி யாரும் எதிர்பார்த்திடாத வகையில் டெல்டாவை சுருட்டி பந்தாடியது கஜாபுயல். நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவளை வட்டாரங்களை தவிடுபொடியாக்கிவிட்டது, 40 ஆண்டுகளுக்கு மேலாகா உழைப்பால் உருவான தென்னைகள், மாமரங்கள், குடிசைவீடுகள், ஓட்டுவீடுகள், தகரசெட்டுகள், விவசாயிகளின் பயிர்கள் என மொத்தத்தையும் சுருட்டிபோட்டுவிட்டு சென்றது. மீனவர்களின் மீன்பிடி படகுகளும் புயலின் கோரதாண்டவத்தால் சூறையாடப்பட்டன.
புயல் சீற்றத்தால் நாகை மாவட்டத்தில் 20,870 மின்கம்பங்களும், திருவாரூர் மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கு மேலான மின்கம்பங்களும் முறிந்தும் விழுந்தன. நாகை மாவட்டதில் 520 மின்மாற்றிகள், 200-க்கும் மேற்பட்ட துணை மின்நிலையங்கள் மற்றும் உயர்மின் அழுத்தப்பாதைகள், மின் பாதைகள் உள்ளிட்டவைகள் சேதமடைந்துள்ளன.
இதனால் கடந்த 8 நாள்களாக மின் விநியோகம் இல்லை. நாகப்பட்டினம், வேதாரண்யம், திருக்குவளை, கீழ்வேளூர் வட்டங்களுக்குள்பட்ட பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. மின்விநியோகம் இல்லாத நிலையில் குடிநீர் கூட கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், கஜா புயலால் சேதமடைந்த மின் கம்பங்கள், மின்பாதைகள்,மின் மாற்றிகள் மற்றும் துணை மின்நிலையங்களின் சீரமைப்புப் பணிகள் புயல் கரையைக் கடந்த மறுதினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிற மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்கள், பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள், தனியார் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 5,200 பேர் கடந்த 8 நாட்களாக நாகை மாவட்டத்தில் மட்டும் சீரமைப்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்ஊழியர்கள் புயலுக்கு பிறகு தொடரும் மழையில் நனைந்தபடியும், நீர்நிலைகளில் இறங்கியும் நேரம் பார்க்காமல் வேலைபார்த்து வருகின்றனர், அதனால் உடல் சோர்வடைந்து உடல் நலக்குறைவுக்கு உள்ளாகி வருகின்றனர். பலர் காயமடைந்தும் வருகின்றனர்.
இவ்வளவு இன்னல்களை சந்தித்துவரும் ஊழியர்களுக்குப் போதிய உணவோ, இருப்பிட வசதிகளோ, மருத்துவ உதவிகளோ கிடைக்கவில்லை என்பதுதான் மின் ஊழியர்களின் ஆதங்கமாக இருக்கிறது. வெளியூர்களிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் வந்து, அடிப்படை வசதிகூட கிடைக்காத நிலையில் திருமண மண்டபங்களிலும் சமுதாயக் கூடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் தங்கி சேவை மனப்பாண்மையோடு சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
அவர்களால் தான் இருண்டுக்கிடக்கிற மாவட்டத்திற்கு வெளிச்சம் கொடுக்கமுடியும் அவர்களையும் கவனிக்க அரசு முன்வரவேண்டும், அவர்களின் பணிகள் என்பது சொல்லமுடியாத சேவைகளை கொண்டதாக, உயிரை பணையம் வைத்து, வௌவால்களை போல தொங்கி வேலை பார்க்கின்றனர். அவர்களையும் மனிதர்களாக பார்த்து உதவ அரசு முன்வரவேண்டும். என்கிறார்கள் சக அரசியல்வாதிகளே.