ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையிலிருந்து வெளியேறும் பாசன வாய்க்கால்களைச் சீரமைக்கும் பணிகளுக்காக, விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கொடிவேரி அணை பாசனத் திட்டத்திற்குட்பட்ட, தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்காலை புதுப்பித்து நவீனப்படுத்தும் திட்டத்திற்கான பணிகளைச் செய்வதற்கு, அரசு ரூ.144 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
இந்த நிலையில், சீரமைப்புப் பணிகளுக்காக, வாய்க்காலில் இருந்து வெளியேறும் நீரை நிறுத்த வேண்டுமென பொதுப் பணித்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பாசனப் பகுதிகளில் உள்ள 21 விவசாய கிளைச் சங்கங்களின் உறுப்பினர்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் 23 -ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் சுபி.தளபதி, “வாய்க்கால் கரைகள் மற்றும் மதகுகளைச் சீரமைக்க அரசு ஒதுக்கியுள்ள நிதியைச் சரியான நேரத்தில் பயன்படுத்தி, பயன் பெற அனைத்து விவசாயச் சங்கங்களும் ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.
மேலும், வாய்க்கால்களில் அமைக்கப்படும் கான்கிரீட் தளங்கள், மதகுகள், படித்துறைகள் கிளை வாய்க்கால் பிரிவுகள் மற்றும் மழை நீர்ப் போக்கிகள் உள்ளிட்டவற்றை சரியான இடத்தில் அமைக்க வேண்டும். இந்தப் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை விவசாயிகள் கண்காணிப்பு செய்ய ஈடுபடுத்தப்பட வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்தப் பணிகளை தற்போது நடைபெற்று வரும் முதல்போக பாசனம் முடிந்தபிறகு, வாய்க்கால்களை கான்ட்ராக்டர்களிடம் ஒப்படைக்கலாமா அல்லது இரண்டாம் போக சாகுபடி முடிந்த பின்னர் ஒப்படைக்கலாமா என்றும் விவசாயிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டது.
இரண்டாம் போகம் முடிந்த பிறகு வாய்க்கால் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டால் அடுத்தாண்டு முதல் போகம் சாகுபடிக்குத் தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்படும் என்று கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், தற்போது நடைபெற்றுவரும் முதல் போக சாகுபடி முடிந்தவுடன், விவசாயிகள் ஒரு போக சாகுபடியைக் கைவிட்டுவிட்டு வாய்க்கால்களின் மேம்பாட்டுப் பணிக்காக, நான்கு மாதங்கள் தண்ணீரை நிறுத்திவைக்கலாம் எனப் பெரும்பாலான விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும், சில விவசாயிகள் மாற்றுக் கருத்தைக் கூறியதால், கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் நிறுத்தப்பட்டு, மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.