சொந்த கட்சி உறுப்பினர்களாலேயே தி.மு.க தோற்கடிக்கப்படும் என வானதி சீனிவாசன் பேசியுள்ளார்.
கோவையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மேடையில் பேசுகையில்,''மாநில சட்டப்பேரவையில் கோயம்புத்தூருக்கு ஒரு பெரிய நூலகம் ஒன்று அமைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவித்து இருந்தார்கள். நேற்று நான் பேசுகின்ற பொழுது 'நிதிநிலை அறிக்கையில் வெறும் நூலகம் என்று அறிவித்திருக்கிறீர்களே அதற்கு எத்தனை கோடி என்று அறிவிக்கவில்லை. எத்தனை காலம் நிர்ணயத்தில் அதை அமைக்க போகிறீர்கள்' என்று கேள்வி கேட்டேன். இன்று மாநிலத்தினுடைய முதல்வர் அவைக்கு வந்து இதற்கு மட்டும் தனியாக ஒரு பதில் கூறிச் சென்றிருக்கிறார்.
நாங்கள் நிச்சயமாக கோவையில் நாங்கள் அதை அமைப்போம். 2026ல் அந்த நூலகம் கட்டும் பொழுது அதன் திறப்பு விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினரான நீங்களும் வரவேண்டும் என கூறிவிட்டு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை நீங்கள் அமைப்பது போல நாங்கள் அமைக்க மாட்டோம் என கிண்டலாக பதில் கூறிச் சென்றிருக்கிறார்.
நாங்கள் கேட்கிறோம் ஒத்த செங்கல்லை வைத்துக்கொண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது வந்தீர்கள். உங்களுக்கு வாக்களித்து மூன்று வருடம் ஆகிறது. அந்த ஒத்த செங்கல்லை வைத்து நீங்கள் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி விட்டீர்களா? மத்திய அரசு எந்த நேரத்தில், எந்த மாதிரி, எந்த திட்டத்தில் எடுத்துக் கொண்டுபோக வேண்டுமோ அந்த முறைப்படி எடுத்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். நேரடியாக ஜப்பானுக்கு சென்று பேசி விட்டு வந்தாகி விட்டது. அதனுடைய பணிகள் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதற்கான காலதாமதம் ஏற்கெனவே அவர்களுக்கும் தெரியும். ஆனால் இப்படி இருந்தாலும் கூட இவர்களால் எவையெல்லாம் செய்ய முடியவில்லையோ அந்த பழியை எல்லாம் தூக்கி மத்திய அரசின் மீது போட்டு வசதியாக மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைக்கிறார்கள். திமுக இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மற்ற எதிர்க்கட்சிகளால் அல்ல, உங்கள் சொந்த கட்சிக்காரர்களால் தோல்வியை தழுவப் போகிறீர்கள். ஏனென்றால் இன்று மக்களுக்கு நீங்கள் நடத்துகின்ற அராஜக ஆட்சி, நீங்கள் நடத்துகின்ற ஊழல் மீது அப்படி ஒரு வெறுப்பு'' என்றார்