சொல்வது ஒன்று ஆனால் செய்வதோ கெடுதல்தான்... அதுவும் துரோகமான அநீதியை வழங்குகிறது தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசு என கொதிக்கிறார்கள் பொது மருத்துவ துறையில் பணியாற்றும் கிராம சுகாதார செவிலியர்கள்.
கொடிய கரோனா வைரஸ் எதிர்ப்பு போரில் தங்கள் குடும்ப உறவுகளையும், உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக உழைத்தவர்கள், உழைத்துக் கொண்டிருப்பவர்கள் பொது சுகாதார துறையில் பணிபுரிகிற அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள். இதை நாடே அறியும்.
இந்த கரோனா எதிர்ப்பு போரில் அர்பணிப்போடு பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு அவர்களின் செயலை போற்றும் வகையில் சிறப்பு ஊதியம், உயிர் காப்பீடு போன்றவற்றை அரசு வழங்கும் என தொடக்க நிலையில் இந்த அரசு அறிவித்தது. ஆனால் இப்போது நடந்தது என்ன, ஏன் நாங்கள் துக்கத்தின் அடையாளமாக கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற வேண்டும் என்பதுதான் பிரச்சனையே... என கூறுகிறார்கள் கிராம சுகாதார செவிலியர்கள்.
கரோனா வைரஸ் தடுப்பு பணியால் அரசின் வருவாய் வழிகள் அடைபட்டுபோனது என்பதால் சுற்றி வளைத்து கடைசியில் அரசு ஊழியர்கள் பெறும் பண பலன்கள் மற்றும் சம்பளத்திலேயே கை வைத்தது. அந்த அறிவிப்பின்படி அரசு ஊழியர்களின் டி.ஏ.அரியர் எனப்படும் ஒரு வருடத்திற்கு 15 நாட்கள் ஒப்படைப்பு விடுமுறை அதற்கான சம்பளத்தை அரசு எடுத்துக் கொள்கிறது. அடுத்து மத்திய அரசு அறிவித்தது போல அகவிலைபடி ஒராண்டுக்கு ரத்து, அடுத்து GPF எனப்படும் ஊழியர்களின் சேமநல நிதிக்கான வட்டி குறைப்பு என அரசு ஊழியர்கள் போராடிப் பெற்ற பண பலன்கள் மீது கைவைத்திருப்பதுதான்.
ஏற்கனவே கரோனா நிவாரண நிதிக்காக அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் 110 கோடி இந்த அரசுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மேலும் பிடுங்குவது போல அரசு செய்கிறது எனக்கூறி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
"நெருக்கடியான நிலையில் அரசு இதுபோன்ற சம்பள பிடித்தம் செய்வதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் எல்லோருக்கும் ஒரே அளவாக இந்த அரசு பார்த்ததுதான் வேதனையாக இருக்கிறது. இந்த வைரஸ் எதிர்ப்பு போரில் நேரடியாக பங்கு பெறும் பொது சுகாதாரத்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் என இவர்களை கௌரவப்படுத்தி, சிறப்பு ஊதியம் எல்லாம் வழங்குவார்கள் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கவுரவமும் வேண்டாம், சிறப்பு ஊதியமும் வேண்டாம் இருப்பதை பறிக்காமல் இருந்தாலே போதும் என்பது தான் நாங்கள் எதிர்பார்ப்பது. எங்களைப்போல இந்த கரோனா வைரஸ் எதிர்ப்பு போரில் பங்கு பெற்றுவருகிற மற்ற துறையை சேர்ந்த பணியாளர்களுக்கும் சேர்ந்துதான் நாங்கள் போராடுகிறோம். இந்த அரசுக்கு எங்களின் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவிக்க வேண்டும் எனத் திட்டமிட்டு மே மாதம் முதல் வாரம் முழுக்க கிராம சுகாதார செவிலியர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் எல்லோரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவதாக முடிவு செய்து இன்றிலிருந்து அதை தொடங்கியுள்ளோம். அரசாங்கம் எங்களது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். உயிர் காக்கும் பணியில் உள்ள எங்கள் சலுகைகளை பறிப்பது அரசுக்கு நியாயம் தானா? என்று தான் கேட்கிறோம்" என குமுறுகிறார்கள் தமிழக கிராம சுகாதார செவிலியர்கள்.
இன்று தமிழக முழுக்க உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள்,செவிலியர்கள், பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.