தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (16/11/2022) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் 21-வது ஆட்சி மன்றக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் இ.ஆ.ப., சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ இ.ஆ.ப., கால்நடைப் பராமரிப்பு பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக் இ.ஆ.ப., சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் கே.என்.செல்வகுமார், வனத்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். "வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு ஆண்டுதோறும் 20 லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் ஆரோக்கியமான பாதுகாப்பான சூழலில் வாழ்வதில் அரசு உறுதியாக உள்ளது. வன விலங்குகளைப் பாதுகாப்பதிலும் அரசு உறுதியாக உள்ளது.
யானைகள் உயிரிழக்கும் விவகாரத்தில் உரிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தமிழ்நாடு வன உயிரின வளமிக்க மாநிலமாகத் திகழ்கிறது. வன உயிரின வாழ்விடங்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். இந்தியாவிலேயே தேவாங்கு காப்பகம் தமிழ்நாட்டில்தான் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.