சேலம் மாவட்டத்தில் இருந்து கோவை செல்வதற்காக அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று (24-10-23) மதியம் போல் கிளம்பியது. அந்த பேருந்து, கருமத்தம்பட்டி அருகே உள்ள எலச்சிபாளையம் பகுதியில் வந்தபோது, பேருந்து எஞ்சினின் முன்புறத்தில் இருந்து புகை வந்துள்ளது.
இதைக் கண்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரும் சந்தேகமடைந்து பேருந்தை நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு சோதனையிட்டனர். அப்போது அந்த எஞ்சினில் தீப்பிடித்து புகை வந்துள்ளதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் எச்சரித்து உடனடியாக கீழே இறங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், அனைத்துப் பயணிகளும் பேருந்தை விட்டு கீழே இறங்கி பாதுகாப்பான தூரத்திற்கு ஓடினர்.
இதையடுத்து, அந்தப் பேருந்தில் இருந்து தீ முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டு அந்த சாலை முழுவதும் புகைமூட்டமாகத் தோன்றியது. தகவல் அறிந்த சூலூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும், இந்த விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.