"இது நம்ம பஸ்ஸு.. நம்மதான் சுத்தமா வெச்சுக்கணும், சரிங்களா.. எல்லாரும் சந்தோஷமா போலாம். ஜாலியா இருக்கலாம்" என அரசுப் பேருந்து கண்டக்டர் ஒருவர் வெள்ளந்தியாக பேசும் வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் அதிக லைக்ஸ்களை குவித்து வருகிறது.
மதுரையில் இருந்து கோயம்புத்தூர் வழியாக செல்லும் அரசுப் பேருந்தில் கண்டக்டராக இருப்பவர் சிவசெல்வம். இவர், இந்த பேருந்தில் பயணிக்க கூடிய பயணிகளிடம் மிகுந்த அக்கறையோடு பேசி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி, பேருந்தில் பயணிகள் பின்பற்ற வேண்டிய கடமைகளை மிக அன்போடு கூறி வந்துள்ளார். அந்த வகையில், கண்டக்டர் சிவசெல்வம் பயணிகளிடம் உரையாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், “உங்க எல்லாருக்கும் வணக்கம்.. இந்த அரசு நமக்கு ஒரு நல்ல பேருந்த கொடுத்து இருக்காங்க. அந்த பேருந்த சுத்தமா வெச்சிக்கணும். பழுது ஏற்படாம பார்த்துக்கணும். இந்த பொறுப்பு நம்ம எல்லாருக்கும் இருக்கு. என்னடா இவரு பஸ்ல ஏறுன உடனே சுத்தத்த பத்தி பேசுறாருனு நெனைக்காதிங்க. நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம். நீங்க சாப்பிட்ற கழிவுகள், பேப்பர்கள், பாட்டில்கள் எல்லாத்தையும் இந்த பஸ்ல இருக்குற கவர்ல போட்டுடுங்க. இது நம்ம பஸ்ஸு.. இத நம்மதான் சுத்தமா வெச்சுக்கணும்” என பயணிகளுக்கு அன்பாக அறிவுரை கூறினார். அதன்பிறகு, பயணிகளுக்கு பேருந்தின் டிக்கெட் விலை குறித்து ஒவ்வொன்றாக விவரித்தார்.
“இந்த வண்டி.. வாடிப்பட்டி வழியா போகும். வாடிப்பட்டி 22 ரூபாய்.. திண்டுக்கல் பைபாஸ் 60 ரூபாய்.. தாராபுரம் 105 ரூபாய், கோயம்புத்தூருக்கு 170 ரூபாய்.. உங்களால முடிஞ்ச அளவுக்கு சில்லறையா கொடுங்க. எல்லாருக்கும் உதவியா இருக்கும். மேலும், உங்களுடைய பயணம் பயனுள்ளதாக இருக்கும். எல்லாரும் சந்தோஷமா போலாம். ஜாலியா இருக்கலாம்” என அன்போடு பேசி முடித்தார் கண்டக்டர் சிவசெல்வம்.
இதைப்பார்த்து நெகிழ்ந்துபோன பயணிகள், சிவசெல்வத்தின் பேச்சை கேட்டு கைதட்டி பாராட்டினர். அதுமட்டுமின்றி, இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் அதிக லைக்ஸ்களை குவித்து வருகிறது.
- சிவாஜி