Skip to main content

திட்டமிட்டபடி இன்றே தேர்வுகள்; குழம்பிய பள்ளி மாணவர்களுக்கு அரசு விளக்கம்

Published on 19/06/2023 | Edited on 19/06/2023

 

Government announcement that supplementary exams will be held today for students who have failed in class 12th

 

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 3,324 மையங்களில் நடந்த இந்த பொதுத்தேர்வை 8.17 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதனையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது.

 

இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 8 ஆம் தேதி வெளியானது. தேர்வு எழுதிய 8.17 லட்சம் பேரில் 7.55 லட்சம் மாணவர்கள் என 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 96.38 சதவீதமும், மாணவர்கள் 91.45 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார். அதேசமயத்தில் 47,973 பேர் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாமல் தோல்வி அடைந்திருந்தனர்.

 

தேர்வில் தோற்ற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கான துணைத் தேர்வுகள் உடனடியாக நடத்தப்பட்டு முடிவுகளும் உடனடியாக வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர். அதேசமயத்தில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக போதிய கால அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

 

அதன்படி ஜூன் 19 தேதி (இன்று) தொடங்கி ஜூலை 4 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக சென்னையில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதன் காரணமாக மாணவர்கள் இன்று துணைத் தேர்வு நடக்குமா என சந்தேகத்தில் இருந்தனர். இந்நிலையில் திட்டமிட்டபடி பன்னிரெண்டாம் வகுப்பு துணைத்தேர்வு நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை உடனடியாக தெரிந்துகொள்ள அரசு தேர்வுகள் இயக்ககம் இணையதளத்துடன் தொடர்பில் இருக்குமாறும் அறிவித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்