
சேலம் அருகே, ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கடத்தி வந்த 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், 11 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் ரயில்களில் முறைகேடாக தங்கம், வெள்ளி, பணம், போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க ஆபரேஷன் சடார்க் என்ற திட்டத்தை ரயில்வே பாதுகாப்பு படையினர் செயல்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மார்ச் 10- ஆம் தேதி இரவு ரயில்வே பாதுகாப்புப் படையினர் சென்னை & மங்களூர் வெஸ்ட்கோஸ்ட் விரைவு ரயிலில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஏறி அனைத்துப் பெட்டிகளிலும் சோதனை நடத்தினர்.
சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியில் ரயில் வந்து கொண்டிருந்தபோது எஸ் 8வது பெட்டியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் அமர்ந்து இருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அவர் வைத்திருந்த பையில் சோதனை செய்தபோது, அதில் 11.61 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான 880 கிராம் தங்க நகைகள் ஆகியவை இருந்தது தெரிய வந்தது. நகைகளை பிளிப் கவர் எனப்படும் 26 சிறு சிறு பாலிதீன் பைகளில் போட்டு வைத்திருந்தனர். பணம் மற்றும் தங்கத்துக்கான எந்த ஆவணங்கும், பில் ரசீதுகளும் அவரிடம் இல்லை.
இதையடுத்து பணம், தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். அந்த வாலிபரையும் ரயில்வே பாதுகாப்புப்படை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அந்த வாலிபர் கோவை கலாம்பாளையத்தைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் விக்னேஷ்வரமூர்த்தி என்பது தெரிய வந்தது.
தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில் இருந்து கோவைக்கு பணம், தங்க நகைகளை கொண்டு செல்வதாக கூறினார். அவர், தனியார் நகை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வருவது தெரிய வந்தது.
பிடிபட்ட பொருள்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் இதுகுறித்து வருமானவரித்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. வருமானவரித்துறை அதிகாரிகள் அவற்றைக் கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.