சிதம்பரம் பகுதியை சேர்ந்த இளைஞர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கடையில் வேலை செய்துவந்துள்ளார். அங்கு அதே கடையில் வேலை செய்த இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண்ணுக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் மேஜர் என்பதால் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வந்து திருமனம் செய்து கொண்டு சிதம்பரம் பகுதிக்கு வந்துள்ளனர்.
இந்தநிலையில் பெண்ணின் பெற்றோர் கோயம்புத்தூர் காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்கள். பெற்றோர்கள் தேடியபோது மகள் சிதம்பரம் பகுதியில் உள்ளார் என தெரியவர சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து மகளை மீட்டுக் கொடுங்கள் என்று கூறியுள்ளனர். இரவு 11 மணிக்கு ஒரு பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைக்கமுடியாது. மேலும் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாது அவரது வழக்கறிஞர் தான் எங்களிடம் பேசினார். அவரது எண்ணும் தற்போது அணைத்து வைக்கப்பட்டுள்ளது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் மகளை பார்க்க ஏற்பாடு செய்யுங்கள் என்று அவரது பெற்றோர்கள் கூறினர். அதற்கு சிதம்பரம் ஏஎஸ்பி இரவு நேரம் என்பதால் காலையில் வாருங்கள். அவர்களை வக்கீல் மூலம் அழைத்து பேசவைக்கிறேன் என்று உறுதி அளித்தனர். இதற்குள் சிதம்பரம் சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் காவல்நிலையம் முன்பு ஒன்றுகூடி பெண்ணை பெற்றோர்கள் பார்க்க ஏற்பாடு செய்யவேண்டும் என காவல்துறையை கண்டித்து கோஷங்களை எழுப்பி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் காவல் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் போக்குவரத்தை சரிசெய்து வேறுவழியில் அனுப்பினர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கஞ்சிதொட்டி பேருந்து நிறுத்தத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதியாக பேசியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் சம்பந்தபட்ட பெண்ணை சிதம்பரம் ஏஎஸ்பி தொலைபேசி வாயிலாக அவரது அப்பாவிடம் பேச வைத்தார். 5 நிமிடம் பேசியபிறகு அந்த பெண் பெற்றோர்களை பார்க்கமுடியாது என்று கூறியுள்ளார். இதனையறிந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து இஸ்லாமியர்களையும் கலைந்துபோக செய்தனர். சம்பவத்தை அறிந்த கடலூர் மாவட்ட எஸ்பி ராஜராம் சிதம்பரத்திற்கு வந்து கூட்டமாக இருந்தவர்களை உடனடியாக கலைந்துபோக செய்தார். இரவு நேரத்தில் இஸ்லாமிய சமூகத்தினரின் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.