திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வானார் என பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.
திமுக-வின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் மனுத் தாக்கல் செய்தனர். இவர்களை தவிர வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர்கள் இருவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து தொண்டர்களின் உற்சாக கரகோசத்துக்கு மத்தியில் மேடை ஏறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து பொதுச்செயலாளர் க.அன்பழகன் கவுரவித்தார். இதன் மூலம் திமுகவின் 2-வது தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து பொருளாளராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அன்பழகன் அறிவித்தார்.
இந்நிலையில், இன்று சென்னை மெரினாவில் உள்ள திமுக முன்னாள் தலைவர் கலைஞர் நினைவிடத்தில் பிரம்மாண்ட அளவில் கண்ணாடியும், பேனாவும் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனாவானது உழைப்பு உழைப்பு உழைப்பு அது தான் ஸ்டாலின் என கலைஞர், அடிக்கடி மு.க.ஸ்டாலினை வாழ்த்தி சொன்ன அந்த 3 வார்த்தைகளை எழுதி கீழே கலைஞரின் கையெழுத்து இடுவது போல் பேனா நிறுத்தப்பட்டுள்ளது.