Skip to main content

மக்களுக்கு உதவாத கொள்கைகளை கைவிட வேண்டும்: சி.எச். வெங்கடாசலம்

Published on 08/01/2020 | Edited on 08/01/2020

 

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. ஜனவரி 8ஆம் தேதி வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தன.

 

chennai



அதன்படி, இன்று மத்திய அரசை கண்டித்து ஒருநாள் வேலைநிறுத்தம் நடைபெற்றது. சென்னையில் அண்ணாசாலை தபால் நிலையம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகவும், கோயம்பேட்டிலும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.
 

நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் வருமானவரித்துறை ஊழியர்கள் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என முழக்கங்களை எழுப்பி ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வங்கி ஊழியர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். 


 

 

அப்போது போராட்டம் குறித்து அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் கூறியதாவது,  எங்களுடைய முக்கிய கோரிக்கையாக புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.  அதேபோன்று மத்திய அரசின் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்து உள்ள நிலையில் உழைக்கும் மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். அதை விடுத்து தொழிலாளர்களின் உரிமையை பறிப்பது, தொழிலாளர் நல சங்கங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றுவது, வேலையில்லா திண்டாட்டத்தை புறக்கணிப்பது போன்ற தவறான பாதையில் அரசு செல்கிறது. தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு உற்பத்தியை பெருக்கி நாட்டின் வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அரசின் கொள்கை நாட்டின் மக்களுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். மக்களுக்கு உதவாத கொள்கைகளை கைவிட வேண்டும். இவ்வாறு கூறினார்.


 

 

சார்ந்த செய்திகள்