Skip to main content

கள்ளநோட்டுகளை நூதன முறையில் மாற்ற முயன்ற கும்பல்! கைது செய்த காவல்துறையினர்!

Published on 25/06/2021 | Edited on 25/06/2021
The gang that tried to change the counterfeit notes in a modern way! Police arrested

 

கள்ள நோட்டுகளை ஏ.டி.எம் இயந்திரம் மூலம் தனது மனைவி வங்கிக் கணக்கில் செலுத்திய கணவரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

புதுகோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் இயங்கிவரும் பரோடா வங்கியில் பணம் செலுத்தும் இயந்திரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி 30 தாள் 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தப் பணம் அறந்தாங்கி களப்பக்காடு பகுதியைச் சேர்ந்த ரேவதி என்பவரின் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. கள்ள நோட்டுகள் என்பதால் வங்கிக் கணக்கில் வரவாக எடுத்துக்கொள்ளவில்லை.

 

ஜூன் 16ஆம் தேதி இயந்திரத்தைத் திறந்து பார்த்தபோது போலி நோட்டுகள் இருந்தது தெரியவந்துள்ளது. அதனால் இயந்திரத்தில் கள்ள நோட்டுகளைச் செலுத்தியவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி வங்கி மேலாளர் ராதாகிருஷ்ணன் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு, ரேவதியின் கணவர் சரவணன், அவரது நண்பர் ரவிச்சந்திரன் ஆகியோரைக் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் கூறியதாவது, “ஆன்லைன் மூலம் அறிமுகமானவர்களிடம் இருந்து பெற்ற  கள்ள நோட்டுகளை வெளியில் மாற்றினால் சிக்கிக்கொள்வோம் என்பதால் மொத்தமாக பணம் செலுத்தும் இயந்திரத்தில் செலுத்தினால் வங்கிக் கணக்கில் ஏற்றப்படும், பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்றுதான் இயந்திரத்தில் செலுத்தினோம்.

 

The gang that tried to change the counterfeit notes in a modern way! Police arrested

 

ஆனால் போலி ரூபாய் நோட்டுகள் என்பதால் இயந்திரம் ஏற்கவில்லை” என்று கூறியுள்ளனர். கள்ள நோட்டுகளை இயந்திரத்தில் வைத்து சிக்கியவர்கள் மூலம் இவர்களுக்குப் போலி நோட்டுகளை கொடுத்தவர்களையும் போலீசார் தேடிவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்