சேலத்தில், வளைகாப்புக்கு வந்த விருந்தினர்கள் அளித்த மொய் தொகையை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக வழங்கிய தம்பதிக்கு பல இடங்களில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
சேலம் பொன்னம்மாபேட்டை வாய்க்கால் பட்டறையைச் சேர்ந்தவர் விஜயன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா என்கிற பிரபாவதி. இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பிரபாவதி தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதையடுத்து அவருக்கு பொன்னம்மாபேட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் வளைகாப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (டிச. 2) நடந்தது. ஐந்நூறுக்கும் மேற்பட்ட உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் விழாவில் கலந்து கொண்டனர்.
வளைகாப்பிற்கு வந்த விருந்தினர்கள் வழங்கும் அன்பளிப்பு தொகையை, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக வழங்க முன்பே முடிவு செய்திருந்த விஜயன் & பிரபாவதி தம்பதியினர், மண்டப அரங்கில் அதற்கென தனி பெட்டி ஒன்றை வைத்திருந்தனர். இதையறிந்த விருந்தினர்கள் மொய் தொகையை நிவாரண நிதி பெட்டியில் போட்டுவிட்டு, தம்பதியை உளமாற வாழ்த்திவிட்டுச் சென்றனர்.
இதுகுறித்து பிரபாவதி கூறுகையில், ''கஜா புயலால் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்துள்ளதை பார்க்கும்போது மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆனால் அதற்காக எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. அதனால்தான் வளைகாப்புக்கு வரும் மொய் பணத்தை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக வழங்க முடிவெடுத்தோம். எங்களால் முடிந்த இந்த சிறு உதவியைச் செய்கிறோம். இப்படி உதவுவது எங்கள் இருவருக்குமே மகிழ்ச்சிதான்,'' என்றார்.
தம்பதியின் வித்தியாசமான முயற்சியை அறிந்த உறவினர்கள், நண்பர்கள் அவர்களுக்கு செல்போன் மூலமாகவும், நேரிலும் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.