பணம் இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி விவசாயியிடம் ரூ.20 லட்சம் ஏமாற்றி பெற்ற சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
அந்தியூர் சின்னத்தம்பி பாளையம் அண்ணமார் பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி (54) அப்பகுதியில் மளிகை கடை, விவசாயம், செங்கல் சூளை வைத்துள்ளார். வருவாயின் அளவு சிறியதாக இருந்ததால் அதனை இரட்டிப்பாக்க எண்ணினார். அப்போது அவருக்கு மூர்த்தி, சேகர் என்ற இருவர் அறிமுகமாகினர். தாங்கள் அளிக்கும் பணத்தை போன்று இன்னொரு மடங்கு பணம் வழங்கப்படும் என்று முத்துசாமியிடம் உறுதியளித்து நம்பிக்கை ஏற்படுத்தினர்.
இதனை நம்பிய முத்துசாமி கடந்த 23 அதிகாலை 3:00 மணியளவில் ஈரோடு பேருந்து நிலையம் பூக்கடை அருகே ரூ.20 லட்சம் ரொக்கத்தை மூர்த்தி, சேகர் அறிமுகப்படுத்திய நபர்களிடம் கொடுத்துள்ளார். அவர்கள் ரூ.30 லட்சம் இருப்பதாக கூறி கொடுத்த சூட்கேசை வாங்கிக் கொண்டு அந்தியூர் சென்று முத்துசாமி அதனை திறந்து பார்த்துள்ளார். அதில் இருந்தது போலியான ரூபாய் நோட்டுகள் என தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். போலி ரூபாய் நோட்டுகள் குறித்து மூர்த்தி, சேகரிடம் கேட்க முற்பட்டார். அப்போது அவர்கள் இருவரின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஈரோடு டவுன் போலீசில் முத்துசாமி புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி ரமேஷ் (45), இவரது தாய் மாமாவான சாமிநாதன் (58), பிரபு (39) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. ஒரு மாருதி ஆம்னி வேனை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். கடந்த 2023ல் திருப்பூர் மாவட்டத்தில் இதே போன்று ரூபாய் நோட்டுகளை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி மோசடி செய்தது தொடர்பாக ரமேஷ் மற்றும் சாமிநாதன் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.