மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரான விஜயபாஸ்கரின் சொந்த தொகுதியான கரூரில், பேருந்து போக்குவரத்து உள்ள அனைத்து வழித்தடங்களிலும், இலவச மினி பேருந்து இயக்கப்படுவதாக அ.தி.மு.க.வின் கரூர் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அறிவித்துள்ளது. அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வழித்தடங்களுக்கும் செல்லக்கூடிய நூறுக்கும் மேற்பட்ட மினி பேருந்துகளில் பொதுமக்கள் எவ்வித கட்டணமுமின்றி இன்று (24/02/2021) ஒருநாள் மட்டும் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (24/02/2021) காலை 07.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கரூர் நகரப் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மினி பேருந்து நிலையத்திலிருந்து முக்கிய வழித்தடங்களான வெங்கமேடு, தாந்தோனிமலை, காந்திகிராமம், வேலுச்சாமிபுரம், வாங்கல், மண்மங்கலம், நெரூர், புலியூர், வெள்ளியணை, டெக்ஸ் பார்க், விஸ்வநாதபுரி ஆகிய பகுதிகளுக்கு, சுமார் 20 கிலோமீட்டர் வரை, மினி பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
வழக்கமான நாட்களில் மாவட்டம் முழுவதும் இயங்கக்கூடிய மினி பேருந்துகளில் ஒரு லட்சம் பேர் வரை பயணம் செய்வார்கள். இன்று (24/02/2021) ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் முகூர்த்தநாள் என்பதால் இரண்டு லட்சம் பயணிகள் வரை இப்பேருந்துகளில் பயணிக்க வாய்ப்புள்ளது.
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தில் முதன்முறையாக கரூர் மாவட்டத்தில் மினி பேருந்துகள் இலவசமாக இயக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.