‘வங்கக் கடலில், மன்னார் வளைகுடா பகுதி மற்றும் அதனை ஒட்டிய இராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில், நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 04/12/2020 அன்று 02.30 மணியளவில் இருந்து, தொடர்ந்து அதே இடத்தில் நிலையாக இருக்கிறது.
இது மேற்கு - தென்மேற்குத் திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக, இராமநாதபுரம் மற்றும் அதையொட்டியுள்ள தூத்துக்குடி கடற்கரையை, அடுத்த 6 மணி நேரத்தில் கடக்கக் கூடும். அடுத்த 24 மணி நேரத்தில், இது மேலும் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை தொடரும்.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கனமழை தொடரும். நாமக்கல், சேலம், அரியலூர், ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு இடங்களில், வீடுகளில் வெள்ளநீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் பரதம்பட்டில் தொடர் மழை காரணமாக, சுமார் 50,000 வீடுகளில், வெள்ள நீர் புகுந்ததால், மக்கள் அவதியடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய 12 பேரை, படகு மூலம் பேரிடர் மீட்புத் துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மழைநீரில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், அந்தப் பகுதியே வெள்ளக் காடாகக் காட்சியளிக்கிறது.
அதேபோல் கள்ளக்குறிச்சியில், கோமுகி ஆற்றில் குளித்த வரதராஜன் என்பவர், வெள்ளத்தில் சிக்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். அவருடன் சென்ற ராஜ்குமார் என்பவரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். தஞ்சை, செந்தலைவயலில் 20 -க்கும் மேற்பட்ட வீடுகளில், வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இப்படித் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.