1 முதல் 5ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.
தொண்ணூறுகளின் துவக்கத்தில் கமலாத்தாள் பாட்டி ஒரு இட்லி கடையை துவங்கினார். கடந்த 30 வருடங்களாக கடையை நடத்திக்கொண்டு வரும் இவர் வெகு காலமாக தனது கடையில் இட்லியை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார். அத்தியாவசியப் பொருட்களின் விலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜிஎஸ்டி போன்ற விலையேற்றங்கள் பல வந்தாலும் இட்லியை ஒரு ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்து வருகிறார். கமலாத்தாள் பாட்டியின் இட்லிக்கடை இருக்கும் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இருக்கும் ஏழை, எளிய மக்கள் மிக குறைந்த விலையில் காலை உணவினை அருந்தி தங்களது பணிகளை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் அண்ணாவின் பிறந்த நாளான இன்று 1 முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
1920 களில் ஜஸ்டிஸ் பார்ட்டி சென்னை மாகாணத்தில் பள்ளி மாணவர்களுக்கு உணவு திட்டத்தை துவங்கியது. அதன் பிறகு ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு தமிழக முதல்வரால் அத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டும் மேம்படுத்தப்பட்டும் வருகிறது. ஜஸ்டிஸ் பார்டியால் 1920களில் துவங்கப்பட்ட மதிய உணவுத்திட்டம் இன்று அதன் நூற்றாண்டு விழாவை எட்டியுள்ளது. அதனை சிறப்பிக்கும் வகையிலும் மேலும் விரிவு படுத்தும் நோக்கிலும் துவக்க நிலை பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இன்று துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை துவங்கியது முதல் நடந்த வரலாற்று சம்பவங்களை தொகுத்து தமிழக அரசின் செய்தி தொலைத் தொடர்பு துறையால் புத்தகமாக கொண்டுவரப்பட்ட ஆவண நூல் வெளியிடப்பட்டது. இந்நூலினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முதல் பிரதியை கமலாத்தாள் பாட்டி பெற்றுக்கொண்டார்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஒடுக்கப்பட்டோர் பிள்ளைகள், ஏழை எளியோர் வீட்டுப் பிள்ளைகள் எதன் காரணமாகவும் பள்ளிக்கு செல்வது தடைபடக் கூடாது என்பதற்காகவே திராவிட இயக்கத்தால் இத்திட்டம் துவங்கப்பட்டது. அன்றுதான் கடந்த நூற்றாண்டின் மாபெரும் இயக்கத்துக்கான விதை தூவப்பட்டது. அதற்காகவே சுயமரியாதை சமூக நீதி கோட்பாடு உருவாக்கப்பட்டது. வகுப்புவாரி இட ஒதுக்கீடு தரப்பட்டது. தகுதியோ சாதியோ கல்விக்கு தடையாக இருக்கக்கூடாது என பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் நினைத்தனர். அவர்கள் நினைத்த திட்டத்தை நான் செயல்படுத்திக் கொண்டு வருகிறேன் என நினைக்கும் பொழுது உள்ளபடியே நான் அளவிட முடியாத மகிழ்ச்சிக்கு ஆளாகிறேன்” என கூறினார்.