தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013 இன் படி பொதுவிநியோகத் திட்ட தரவுகளில் ஏற்கனவே பதியப்பட்ட முன்னுரிமை மற்றும் அந்தியோதய அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களைச் சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்துப் பயனாளிகளின் கை விரல் ரேகை பதிவு அடிப்படையிலான சரிபார்ப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதன்படி கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல்ரேகை சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 63% குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. மீதியுள்ள அட்டைதாரர்களுக்கும் சரிபார்க்கும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேசன் கடைகளில் கை விரல் ரேகை சரிபார்ப்பை பிப்ரவரி மாத இறுதிக்குள் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு சரிபார்க்கவில்லையெனில் குடும்ப அட்டையில் இருந்து பெயர்கள் நீக்கம் செய்யப்படும் என்று சில நாளிதழ்களில் செய்தி வெளியாகி இருந்தது. இதனையடுத்து ரேசன் கடைகளில் கை விரல் ரேகை சரிபார்க்காதவர்களின் குடும்ப அட்டைகள் ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது, கை விரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்களும் நீக்கப்படாது, வெள்ளைத்தாளில் சுய விவரங்கள் ஏதும் தரவேண்டியதுமில்லை என்பதால் இதுகுறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், “கை விரல் ரேகை பதிவுக்காக யாரையும் கட்டாயப்படுத்தி ரேசன் கடைக்கு வரவழைக்கக்கூடாது. கை விரல் ரேகை பதிவின் போது ஆவணங்கள் எதையும் கேட்க கூடாது. கை விரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்படும் என்ற தவறான தகவலை தரக்கூடாது. குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப, ரேசன் கடைக்கு சென்று கை விரல் ரேகையை பதிவு செய்துகொள்ளலாம். ரேசன் கடையில் விற்பனை முடிந்ததும் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று கை விரல் ரேகை பதிவு செய்யும் பணியை முடிக்க அறிவுறுத்தப்படுகிறது. பயனாளிகளுக்கு இடையூறு இல்லாமல் குழப்பமின்றி கை விரல் ரேகை பதிவு பணியை முடிக்க வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.