இந்த வருடம் தீபாவளி பண்டிகை வரும் 12 ஆம் தேதி (12.11.2023) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி பல்வேறு தரப்பினரின் கோரிக்கையையும் ஏற்று தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 13 ஆம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி, பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில், “தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்களின் படி தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம். பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்கலாம். மேலும், அமைதியான மண்டலங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், மத ஸ்தலங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற பிற முக்கிய இடங்களில் பட்டாசுகளை வெடித்தல் சட்டத்தால் தடை செய்யப்பட்டது மற்றும் சட்டத்தின் படி தண்டனைக்குரியது ஆகும். பெருநகர சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் மற்றும் நெகிழி கழிவுகள் மேலாண்மை விதிகளின் படி பட்டாசு குப்பைகளை மற்ற எந்த குப்பைகளுடனும் கலக்காமல் தினம்தோறும் வகைப்படுத்திய குப்பையை பெற வரும் மாநகராட்சி தூய்மை பணியாளரிடம் தனியாக ஒப்படைக்கவும்.
குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற விற்பனையாளர்களிடமிருந்து எப்போதும் பட்டாசுகளை வாங்க வேண்டும். திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்கும் போது சுற்றுப்புறத்தில் எரியக்கூடிய அல்லது எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் ஏதும் இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். பட்டாசுகளை மூடிய கொள்கலனில் சேமித்து வைக்கும்போது சுற்றுப்புறத்தில் எரியக்கூடிய அல்லது எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் ஏதும் இல்லை என்பதை உறுதிசெய்யவும்.
தீக்காயக ளிம்புகள், வாளி நிறைய தண்ணீர் மற்றும் தீயை அணைக்கும் கருவிகளை முதலுதவிக்கு வைத்திருக்க வேண்டும். குழந்தைகள் பெற்றோர்கள் மேற்பார்வையில் பட்டாசுகளை வெடிப்பதை உறுதி செய்ய வேண்டும். தீப்பிடிக்காமல் இருக்க பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். காதுகளின் சேதத்தைத் தவிர்க்க உங்கள் காதுகளில் பருத்தி செருகிகளை வைக்கவும். வீட்டு கூரையின் மேற்புறத்தில் எளிதில் தீ பற்றக்கூடிய பொருளை அகற்றப்பட்டதா என்று உறுதி செய்யவும். பட்டாசு கொளுத்தும்போது காலணிகளை அணிய வேண்டும். மருத்துவ முதலுதவி பெட்டிகளை அருகில் வைத்திருக்க வேண்டும். மருத்துவ அவசர உதவிக்கு எண் 108 அழைக்கவும். பட்டாசு கழிவுகளை சேகரித்து தனித்தனியாக கோணி பைகளில் வைத்து துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்கவும்.
பட்டாசுகளை கையில் வைத்து வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மெழுகுவர்த்திகளை எரியும் இடத்தில் பட்டாசுகள் வைப்பதை தவிர்க்க வேண்டும். மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பாதி எரிந்த பட்டாசுகளை ஒருபோதும் வீசாதீர்கள், அவை எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களின் மீது விழுந்து தீ விபத்தை ஏற்படுத்தலாம். வாகனங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பட்டாசுகள் உடனடியாக வெடிக்காமல், வெடிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டால், அவற்றை கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள்ளும் அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுடன் கூடிய பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். பட்டாசுக் கழிவுகளை வீடுகளில் உள்ள ஈரமான அல்லது உலர் கழிவுகளுடன் சேர்க்க வேண்டாம். பட்டாசு கழிவுகளை பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் குப்பை தொட்டிகளில் கொட்டக்கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.