நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் திருப்பத்தூரைச் சேர்ந்த மருத்துவ மாணவர் முகமது இர்பானுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரைச் சேர்ந்தவர் முகமது இர்பான். மருத்துவக் கல்லூரி மணவரான இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் ‘நான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இளங்கலை மருத்துவம் பயின்று வந்த நிலையில், நீட் தேர்வில் முறைகேடு செய்ததாகக் கூறி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையின் பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. நான் எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்கவும் தயாராக இருக்கிறேன். ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘மாணவரின் தந்தையே இந்த முறைகேட்டுக்கு முக்கிய காரணமாக இருப்பதுபோல் தோன்றுகிறது. நீட் தேர்வு நடந்தபோது மாணவர் மொரிஷியஸில் இருந்துள்ளார்.’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, தந்தையின் ஜாமின் மனுவையும் இங்கேயே தாக்கல் செய்ய மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டும், மதுரை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் முன்பாக தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையுடன் மாணவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் கைதான நான்கு மாணவர்கள் மற்றும் மாணவி ஒருவருக்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், கைதான மாணவர்களின் தந்தை மற்றும் தாய்க்கு ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.