சேலம் மாவட்டம் ஏற்காடு நார்த்தஞ்சேடு அருகே உள்ள கும்பிபாடியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (40). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் தங்கராஜ், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி புஷ்பா (30).
சிவக்குமார் காய்கறி வியாபாரம் மட்டுமின்றி அவ்வப்போது கிடைத்த வேலைகளையும் செய்து வந்தார். அவரும் புஷ்பாவும் ஒரே இடத்திற்கு அடிக்கடி வேலைக்குச் சென்றபோது அவர்களுக்குள் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் ரகசிய இடத்தில் சந்தித்திருக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் அரசல்புரசலாக தங்கராஜுக்கு தெரிய வந்துள்ளது. உடனடியாக அவர் இருவரையும் அழைத்துக் கண்டித்துள்ளார். அவருடைய உறவினர்களும் சிவக்குமாரைக் கண்டித்துள்ளனர். ஆனாலும் பலத்த எதிர்ப்புகளையும் மீறி இருவரும் தங்களின் ரகசிய சந்திப்புகளைத் தொடர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், டிச. 9 ஆம் தேதி இரவு தனது வீட்டின் அருகில் சிவக்குமார் நின்று கொண்டிருந்த போது தங்கராஜும் அவருடைய தந்தை மாணிக்கமும் அங்கு வந்தனர்.
அவர்கள் சிவக்குமாரிடம் தகராறில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் தங்கராஜ் தான் வைத்திருந்த இரும்பு கம்பியால் சிவக்குமாரை பலமாக தாக்கியுள்ளார். கத்தியாலும் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார். தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவக்குமார் உயிரிழந்தார்.
இதையடுத்து, சிவக்குமாரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஏற்காடு காவல் ஆய்வாளர் செந்தில்ராஜ்மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சிவக்குமாரைக் கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த தங்கராஜ் (35), மாணிக்கம் (60) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
காவல்துறையினரிடம் தங்கராஜ் அளித்துள்ள வாக்குமூலம்:
''என் மனைவி புஷ்பாவுடன் கடந்த ஓராண்டாக சிவக்குமார் நெருங்கிப் பழகி வந்துள்ளார். அவர்கள் இருவரும் தனியாக இருந்ததை ஒருநாள் பார்த்துவிட்டேன். அதன்பிறகு மனைவியையும் சிவக்குமாரையும் கண்டித்தேன். என் மனைவியை விட்டு விடும்படி பலமுறை கூறியும் எனக்குத் தெரியாமல் சிவக்குமார் புஷ்பாவைச் சந்தித்து வந்துள்ளார். இதனால் நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.
இனிமேலும் வாயால் பேசினால் போதாது என்று அவருக்கு வேறு விதமாக எச்சரிக்கை செய்ய வேண்டும் என்ற முடிவுடன் நானும் என் தந்தை மாணிக்கமும், சம்பவத்தன்று அவருடைய வீட்டிற்குச் சென்றோம். தெருவில் நின்று கொண்டிருந்த அவரிடம் புஷ்பாவை இனிமேல் சந்திக்கவே கூடாது என்று எச்சரித்தேன். ஆனால் அவர் அதைக் கேட்காமல் என்னை எதிர்த்துப் பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் இரும்பு கம்பியால் தாக்கினேன். கத்தியாலும் வெட்டினேன். பலத்த காயம் அடைந்து கீழே விழுந்துவிட்டார். அதன்பிறகு நானும் என் தந்தையும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டோம். அவர் உயிரிழந்த நிலையில் நாங்கள் சிக்கிக் கொண்டோம்'' என்று வாக்குமூலத்தில் தங்கராஜ் கூறியுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர். இதையடுத்து, கைதான இருவரையும் நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல்துறையினர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.