
சிதம்பரம் தெற்கு வீதியில் சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 42 ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வரும் 18ம் தேதி நடைபெறுகிறது என சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் செயலாளர் சம்பந்தம் மேலவீதியில் செய்தியாளர்களைச் சந்தித்து கூறினார்.
செய்தியாளர் சந்திப்பின்போது அவர் பேசுகையில், "சிதம்பரத்தில் நடைபெறும் நாட்டியாஞ்சலி இறை உணர்வுடன் ஆடல் கலைஞர்கள் தங்கள் நாட்டியத்தை அஞ்சலியாக நடராஜப் பெருமானுக்கு அர்ப்பணிக்கும் தன்மையால் தனி சிறப்பு பெற்றதொரு விழா. ஆண்டுதோறும் மாசி மாதம் மகா சிவராத்திரி நாளில் தொடங்கி 5 நாட்கள் நடைபெறும். இதில் பாரதத்தின் பாரம்பரியமிக்க பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம், கதக், ஒடிசி மற்றும் இதர வகை நடன கலைஞர்கள் இந்த ஐந்து நாட்களிலும் சிதம்பரத்தில் ஒன்று கூடி தங்கள் நாட்டிய அஞ்சலியை செலுத்துகின்றனர். இறை உணர்வும் அர்ப்பணிப்பு உணர்வும் நிறைந்திருப்பதால் இந்த விழா மற்ற விழாக்களில் இருந்து மாறுபட்டு 42 ஆண்டுகளாக சிறப்பு பெற்று வருகிறது" எனக் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பின் போது நாட்டிய அஞ்சலி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் முத்துக்குமரன், முன்னாள் தலைவர் ஏ.கே. நடராஜன், துணைத் தலைவர்கள் நடராஜன், ராமநாதன், பொருளாளர் கணபதி, உறுப்பினர் அருள்மொழிச்செல்வன் உள்ளிட்ட நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.