வடகிழக்குப் பருவமழை இந்த வருடம் எதிர்பாராத வகையில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்துள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாகப் பெய்ததில் பல மாவட்டங்கள் வெள்ளக் காடாயின. மாநிலத்தின் அனைத்து அணைகளும் அதன் கொள்ளவை எட்டியுள்ளன. இதே போன்று தென் மாவட்டங்களிலும் தொடர் கனமழையின் காரணமாக தாமிரபரணியாற்றில் வெள்ளப்பெருக்குவரை நிலைமை போனது. இந்த அடைமழை காரணமாக விவசாயப் பணிகளும் வேகமெடுத்துள்ளன. அதே சமயம் விவசாயிகளுக்கு அவசியத் தேவை உரம்.
தூத்துக்குடி மாவட்டத்தின் வல்லநாடு எனும் பகுதி தாமிரபரணிக் கரையோரம் அமைந்துள்ளது. அதனைச் சுற்றியுள்ள அகரம், பக்கம், வசப்பபுரம் முறப்பநாடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் பயிர் போடப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் ஒரு போகம், தவறினால் இரண்டு போகம் என்று மகசூல் கண்ட விவசாய நிலங்கள், தற்போதைய மழை செழிப்பு காரணமாக மூன்று போக விளைச்சலுக்குத் தயாராகியுள்ளன.
இதனால் தற்போதைய நிலையில் நெல் பயிரின் ஆரம்ப அடி உரமான யூரியா மிக அவசியமாகிறது. அரசின் வேளாண்துறையினர் யூரியா மூடை பெறுவதற்கு ஆதார் அவசியம் என்று அறிவித்துள்ளனர். இதனால் வல்லநாடு மற்றும் சுற்றுப்புற கிராம விவசாயிகள் தேவையான யூரியா மூடையைப் பெற ஆதார் கார்டுகளுடன் வல்லநாடு கிராமத்தின் தனியார் கடையில் குவிந்துள்ளனர்.
ஒரு ஆதார் கார்டுக்கு ஒரு மூடை யூரியாதான் என்று சொல்கிறார்கள். ஆனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு இங்கே ஒன்று முதல் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. எனவே எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு ஒரு மூடை யூரியா விவசாயத்திற்கு சரிப்படுமா. பொதுவாக ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு அதன் மகசூல் பருவம்வரை இரண்டு மூடைகள் குறைந்தபட்சம் தேவைப்படும். ஒரு மூடையைக் கொண்டு சமாளிக்க முடியுமா. பயிர் வெளைஞ்ச குடும்பப்பாடு கழியும் என்பதே எங்கள் நிலை. பயிர் விளையாவிட்டால் நட்டமாகிவிடுமே. மொத்தத்தில் இந்த மாவட்டத்தில் மட்டும் 400 மெட்ரிக் டன் யூரியா வந்ததுள்ளது. அது போதாமல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கு. மேலும் யூரியாவைப் பெற ஆதார் கார்டுடன் இங்கே உள்ள தனியார் கடையில் தவம் கிடக்க வேண்டியிருக்கு. அரசு தலையிட்டு விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை வழங்க வேண்டும் என்கிறார்கள் வல்லநாடு விவசாயிகள்.