
மத்திய அரசு மாநிலங்களவையில் புதிதாக தாக்கல் செய்துள்ள மூன்று வேளாண் சட்ட மசோதா நிறைவேற்றியதை கண்டித்து மன்னார்குடியில் காவிரி பாசன விவசாயிகள் சட்ட நகல் எரித்து போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளை நிலத்தை விட்டும், வேளாண் தொழிலை விட்டும் அப்புறப்படுத்திவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களை ஆதரிக்கும் விதமாக உள்ளது. உடனடியாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சார்ந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் காவிரி பாசன விவசாயிகள் அமைப்பினர் மத்திய மாநில அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பியும், மசோதா சட்ட நகலை எரித்தும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
"வேளாண் சட்ட திருத்தத்தை உடனடியாக திரும்ப பெறவில்லை என்றால் நாடு முழுவதும் விவசாயிகளை ஒன்று திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம், " என மத்திய மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் விவசாயிகள்.