மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், இதற்காக 300 நாட்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தருவதற்கும் இன்று (27.09.2021) இந்தியா முழுக்க எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இதில் ஒருபகுதியாக, அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், சேனாபதி கிராமத்திலும் போராட்டம் நடத்தப்பட்டது.
சேனாபதி கிராமத்தில் உள்ள புள்ளம்பாடி கிளை வாய்க்காலில் ஐக்கிய உழவர் முன்னணி போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவருமான தங்க சண்முக சுந்தரம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகி வேலுமணி முன்னிலை வகித்தார்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேனாபதி கிராமத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், ‘இந்திய அரசு, இந்திய விவசாயிகளைத் தொடர்ந்து அவமதிக்கும் செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும்; இந்திய உழவர்களைப் பாதிக்கவல்ல சட்டங்களை வாபஸ் பெற வேண்டும்; குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் என்ற விவசாயிகளின் நீண்டகால கோரிக்கைகளைப் புறக்கணிக்க முயற்சிக்கும் சட்டம் இது; உழவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கி படுபாதாளத்தில் தள்ளவும், எதிர்கால விவசாயம் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கத்தால் பெரும் சீரழிவை சந்திக்க உள்ளது. கார்ப்பரேட்களுக்கு ஆதரவான, உழவர்களின் நலன்களுக்கு, நுகர்வோர்களின் வாங்கும் திறனுக்கு உலை வைக்கும் போக்கிற்கு உறுதுணையாக உள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்’ உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
உடல் முழுக்க மண்ணைப் பூசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு நிர்வாகிகள் குமரவேல், குமார், சங்கர், சாமிநாதன், இராஜா, சின்னப்பிள்ளை, சேகர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு இந்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.